'மாஸ்க் வாங்க எங்களுக்கு வசதி இல்ல...' 'நாங்க ரெண்டு பேரும் இதத்தான் போட்டுக்குறோம்...' பனை ஓலையில் மாஸ்க் செய்து அணிந்த ஏழை விவசாயி...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Mar 30, 2020 08:22 AM

தூத்துக்குடி மாவட்டத்தில் பனை ஓலைகளில் மாஸ்க் அணிந்து மரம் ஏறும் ஏழை விவசாயின் செயல் அனைவரையும் ஆச்சரியம் அடைய செய்துள்ளது.

The poor farmer in a mask made of palm leaves

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 144 ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. ஊடகம், விவசாயம் மற்றும் மருத்துவ தொடர்பான துறைகளை தவிர அனைத்து தொழில்துறைகளும் முடக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் பரவலில் இருந்து நம்மை தற்காத்து கொள்ள பயன்படும் மாஸ்க் மற்றும் கிருமி நாசினிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஓரு சில இடங்களில் நிர்ணயிக்கப்பட்ட விலைகளுக்கு அதிகமாக விற்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் பகுதியில் வசிக்கும் பனை தொழிலாளர்கள் தங்களை தற்காத்து கொள்ள உபயோகித்த பொருள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

குணசேகரன் மற்றும் அவரது மனைவி முருகலட்சுமி தம்பதியினர் தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகேயுள்ள கு.சுப்பிரமணியபுரத்தில் பனைத் தொழில் விவசாயம் செய்து வருகின்றனர். பனைமரங்களில் இருந்து பதநீர் இறக்கும் இந்த வேலையானது வருடத்திற்கு 4 முதல் 6 மாதங்களுக்கு தான் இருக்கும். பனையில் பாலை வந்து அதை பக்குவப்படுத்தி இடுக்கி சீவி விட்டால் தான் பதநீர் இறக்கி கருப்பட்டி தயாரிக்க முடியும். அந்த பாலையை ஒரு நாள் சீவாமல் விட்டாலும் காய்ந்து விடும், பதநீர் இறக்க முடியாத சூழ்நிலையில் உள்ளனர் இக்குடும்பத்தினர்.

கொரோனா வைரஸில் இருந்து தங்களை தற்காத்து கொள்ளவும், இந்த இக்கட்டான சூழ்நிலையில் தங்களின் தொழிலை கைவிட முடியாமல் தவித்தவர்கள் அனைவரையும் போல் நவீன முகக் கவசத்தை பயன்படுத்தாமல், பனை ஓலைகளில் முக கவசம் தயாரித்துள்ளனர் குணசேகரன் முருகலட்சுமி தம்பதியினர்.

மேலும் இது குறித்து கூறிய குணசேகரன் "எல்லோரும் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முகக்கவசம் அணிந்து செல்கின்றனர். எங்களால் முகக்கவசம் வாங்கும் அளவுக்கு வசதி இல்லை. அதனால் தான் பனை ஓலையிலேயே முகக்கவசம் தயாரித்து, வெளியில் போகும் போது பயன்படுத்தி வருகிறோம். நாங்கள் ஒரு வாரமாக இதை தான் நானும் என் மனைவியும் பயன்படுத்தி வருகிறோம்." என தெரிவித்தியுள்ளார்.

Tags : #MASK