பக்கத்து வீட்டாருடன்... குப்பை கொட்டுவதில் தகராறு... சாப்ட்வேர் இன்ஜினியர் இப்படி செய்வாருனு யாரும் நினைக்கல!.. சென்னையில் பரபரப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்போரூர் அருகே குப்பை கொட்டுவதில் ஏற்பட்ட தகராறில் விளையாட்டு போட்டியில் பயன்படுத்தும் துப்பாக்கியால் சுட்ட சாப்ட்வேர் இன்ஜினியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கல், சீனிவாசபுரம், ஆர்.ஆர். நகரை சேர்ந்தவர் நாகேந்திரன் (28). சாப்ட்வேர் இன்ஜினியரான இவர், அந்த பகுதியில் 4 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் சாந்தி என்பவருக்கும், இவரது குடும்பத்தினருக்கும் இடையே குப்பை கொட்டுவதில் தகராறு இருந்து வந்துள்ளது. இதனால், இரு குடும்பத்தினரிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று மீண்டும் இரு தரப்பினருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த நாகேந்திரன் விளையாட்டு போட்டிகளில் பயன்படுத்தப்படும் துப்பாக்கியை எடுத்து வந்து சாந்தியை மிரட்டும் வகையில் 4 ரவுண்டு வானத்தை நோக்கி சுட்டுள்ளார். துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அலறியடித்து ஓடி வந்து பார்த்துள்ளனர். உடனே, இதுகுறித்து போரூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை செய்துள்ளனர்.
அதில், இரு வீட்டுக்கும் இடையே குப்பை கொட்டுவது, கழிவுநீர் விடுவது தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக, நாகேந்திரன் துப்பாக்கியால் சுட்டு மிரட்டியது தெரியவந்தது. நாகேந்திரன் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதில் ஆர்வம் உள்ளவராம். அதற்காக விளையாட்டு போட்டிகளில் பயன்படுத்தும் துப்பாக்கியை ஆன்லைனில் வாங்கி வைத்துள்ளார். இதில், உண்மையான தோட்டாவை பயன்படுத்த முடியாது. ரப்பர் தோட்டாவை பயன்படுத்தி சுட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து, நாகேந்திரனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
