'சென்னையில்' கொரோனா 'உச்சகட்ட' தாண்டவம் ஆடிய ஏரியா!.. இப்போ மொத்தமா 'உறைய' வைத்த 'சர்ப்ரைஸ்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் கொரோனா பாதிப்பில் உச்சபட்ச இடங்களில், ராயபுரம், தண்டையார்பேட்டை மண்டலங்கள் இருந்தன. இந்நிலையில் இந்த ஏரியாக்கள் 8-ஆம் இடத்திற்கு மேல் நகர்ந்துள்ளன. இந்த ஏரியாக்களில் பாதிப்பு எப்படி குறைந்தது என்று சென்னையில் பலரும் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.
சென்னை தண்டையார்பேட்டை மண்டலத்தில் 15 வார்டுகளில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மிகவும் குறுகலான தெருக்கள், சந்துகள், வீடுகள் என்று போதுமான வசதிகளும் மக்களிடையே விழிப்புணர்வும் குறைவாக இருந்த நிலையில் தண்டையார்பேட்டை மண்டலத்தில் காட்டுத்தீ போல கொரோனா மிகவும் எளிதாக பரவியிருந்தது.
முன்னதாக தண்டையார்பேட்டை மண்டலத்தில் ஜூன் மாதத்தில் 4 ஆயிரத்து 726 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கை வெறும் 814 ஆக குறைந்துள்ளது, இது முன்பைவிட குறைவான எண்ணிக்கை என்று கூறப்படுகிறது. இதேபோல் ராயபுரத்திலும் கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ளது.
கடந்த மாதங்களைவிட அதிக எண்ணிக்கையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு நிலையிலும், இந்த மாதத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைந்ததாகவும் 6000 களப் பணியாளர்களின் உதவியுடன் வீடு வீடாக சென்று அறிவுரை கூறி, தொற்றை கண்டறிந்து நடவடிக்கை எடுத்ததால் கொரோனா குறையத்தொடங்கியதாக மண்டல பொறுப்பாளர் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், மாநகராட்சி ஊழியர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்டோர் அரசு வகுத்த பல்வேறு உத்திகளை பின்பற்றி களத்தில் இறங்கி பொது மக்களின் ஒத்துழைப்புடன், கொரோனாவுக்கு எதிராக பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.