‘12 கிரவுண்ட்டில் அறக்கட்டளை’!.. பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு.. ஜாமீன் மனுவில் சிவசங்கர் பாபா ‘பரபரப்பு’ தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைதான சிவசங்கர் பாபா ஜாமீன் கோரிய மனுவில் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே புதுப்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா (79). இவர் தனது பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது 3 பள்ளி மாணவிகள் கொடுத்த புகார்களின் பேரில் தனித்தனியாக 3 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தற்போது சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசங்கர் பாபா 2 முறை ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த ஜாமீன் மனுக்களை செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் மற்றும் மாவட்ட முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி சிவசங்கர் பாபா மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளிக்கும் தனக்கும் தொடர்பில்லை என்றும் ஆன்மிகம், தமிழ் சார்ந்த சொற்பொழிவுக்கு மட்டுமே அந்த பள்ளிக்கு சென்றதாக சிவசங்கர் பாபா குறிப்பிட்டுள்ளார். மேலும் நீலாங்கரையில் 12 கிரவுண்ட் நிலத்தில் சம்ரக் ஷனா அறக்கட்டளையை மட்டுமே நடத்துவதாக சிவசங்கர் பாபா தெரிவித்துள்ளார்.
தனக்கும், பள்ளிக்கும் எதிராக புகார் அளித்த பெண், புகார் அளிப்பதற்கு 2 மாதங்களுக்கு முன்புவரை அந்த பள்ளியில் நாட்டிய நிகழ்வை நடத்தி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். ரத்தக் கொதிப்பு, நீரழிவு மற்றும் இதயம் தொடர்பான பிரச்னைகள் தனக்கு இருப்பதாகவும், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இதற்காக சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துள்ளதாகவும் சிவசங்கர் பாபா குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் இன்று (03.08.2021) சிவசங்கர் பாபா-வின் ஜாமீன் மனுக்களை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி, இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

மற்ற செய்திகள்
