சவுக்கு சங்கரின் சிறைத்தண்டனைக்கு எதிராக போடப்பட்ட வழக்கு.. உச்சநீதிமன்றம் வெளியிட்ட பரபரப்பு உத்தரவு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில், சங்கருக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்கால தடை விதிப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
நீதித்துறையை பற்றி சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டதாக சவுக்கு சங்கர் மீது தாமாக முன்வந்து உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு மீதான விசாரணையில் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி நீதிபதிகள் G.R.சுவாமிநாதன், B.புகழேந்தி அமர்வு உத்தரவிட்டது. இதையடுத்து அவர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளை விதித்திருந்த தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் சவுக்கு சங்கர். இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, ஜே.கே.மகேஸ்வரி அடங்கிய அமர்வு முன்னிலையில் நடைபெற்றது. அப்போது இந்த மனுவை பரிசீலித்த நீதிபதிகள் சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனைக்கு இடைக்கால தடை விதிப்பதாக உத்தரவிட்டனர்.
மேலும், மனு மீதான விசாரணையின்போது விமர்சிக்க அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால், அதற்கும் ஒரு வழிமுறை இருப்பதாகவும் அதன்படியே விமர்சனங்கள் முன்வைக்கப்பட வேண்டும் என்றனர்.
தொடர்ந்து, இந்த வழக்கு குறித்த அடுத்த விசாரணை நடைபெறும் வரை சவுக்கு சங்கர் இந்த வழக்கு குறித்து எவ்வித கருத்துகளையும் தெரிவிக்கக் கூடாது என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், சவுக்கு சங்கரின் மேல்முறையீட்டு மனு தொடர்பாக பதில் அளிக்கும்படி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை பதிவாளர், டுவிட்டர், ஃபேஸ்புக், யுடியூப், மத்திய மின்னணு தகவல் தொழில்நுட்ப அமைச்சக செயலர் ஆகியோருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Also Read | இந்தியாவை வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இங்கிலாந்து.. பாகிஸ்தான் பிரதமர் போட்ட பரபர ட்வீட்.. T20WC2022