'சாட்டை துரைமுருகன் அதிரடி கைது'... 'தம்பிகளை விடுதலை செய்யுங்கள்'... 'சீமான் காட்டம்'... பின்னணி காரணம் என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருச்சியில் சாட்டை துரைமுருகன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் குறித்து வினோத் என்பவர் ட்விட்டரில் அவதூறு பரப்பியதாகக் கூறி, திருச்சியில் அவர் நடத்தும் கார் உதிரிப் பாகங்கள் விற்பனை செய்யும் கடையை முற்றுகையிட்டு, நாம் தமிழர் கட்சியினர் மற்றும் தமிழ்த் தேசிய ஆதரவாளர்கள் என்று கூறப்படும் சாட்டை துரைமுருகன் உட்படச் சிலர் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோர், ட்விட்டரில் பிரபாகரன் குறித்துப் பதிவிட்ட வினோத்தை அதற்காக மன்னிப்பு கேட்க வைத்து, அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இதற்கு ட்விட்டரில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. சட்டத்திற்குப் புறம்பாக ஒருவரை மிரட்டி வீடியோ எடுத்து அதனைச் சமூகவலைத்தளங்களில் பதிவிடுவது கண்டிக்கத்தக்கது எனப் பலரும் தங்கள் கருத்துக்களைப் பதிவிட்டு வந்தனர்.
இதையடுத்து வினோத் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து சாட்டை துரைமுருகன், சரவணன், சந்தோஷ், வினோத் ஆகிய நான்கு பேரையும் திருச்சி கே.கே.நகர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சட்டப்பிரிவு 143,447,294(b),506(2) of IPC அடிப்படையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ''தம்பிகளைக் கைது செய்திருப்பது என்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட செயல். சட்டத்திற்குப் புறம்பாகக் கைது செய்யப்பட்டுள்ள தம்பிகள் சாட்டை துரைமுருகன், வினோத், சந்தோஷ் என்ற மகிழன், சரவணன் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்யவேண்டுமென வலியுறுத்துகிறேன் எனவும் அந்த அறிக்கையில் சீமான் கூறியுள்ளார்.
தமிழ் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களை அவதூறாக பேசிய திருச்சி சமர் கார் ஸ்பா நிறுவனத்தை சார்ந்த வினோத் என்பவர் புரிதல் பிழையால் பேசிவிட்டேன் என மன்னிப்பு கேட்டதை அடுத்து அவருக்கு அறிவுரை கூறி விடை பெற்றோம்#TamilsPrideLTTE #தலைவர்பிரபாகரன் pic.twitter.com/cRQVcgW5Mj
— Duraimurugan (@Saattaidurai) June 11, 2021