'கண்டிப்பா வந்துருங்க' தாம்பூல தட்டுடன் வீடு வீடாக சென்று அழைப்பு விடுத்த கவுன்சிலர்.. இதுதான் விஷயமா..? வைரல் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாமக்கல் மாவட்டத்தில் கவுன்சிலர் ஒருவர் நகர சபை கூட்டத்திற்கு தாம்பூலம் வைத்து மக்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். இந்நிலையில், இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தமிழகத்தில் குடியரசு தினம், சுதந்திர தினம், தொழிலாளர் தினம், காந்தி ஜெயந்தி, மார்ச் 22, நவம்பர் 1-ல் கிராம சபை கூட்டம் நடைபெறும் என தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் அண்மையில் சட்டசபையில் அறிவித்திருந்தார். கிராம மக்கள் தங்களது குறைகள் மற்றும் தேவைகளை இந்த கூட்டத்தில் அதிகாரிகளிடத்தில் நேரடியாக கூறலாம். இருப்பினும், தமிழகத்தில் நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தல்கள் நடந்து முடிந்த நிலையிலும், நகர சபை மக்கள் கூட்டம் நடைபெறாமல் இருந்தது.
இதனையடுத்து, நகர சபை கூட்டங்களை நடத்துமாறு முதல்வர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, இன்று (நவம்பர் 1) தமிழகத்தில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற இருக்கின்றன. அதேபோல, நகர மற்றும் மாநகர சபைகளையும் இன்று நடத்தும்படி முதல்வர் தெரிவித்திருந்தார். இந்த கூட்டத்தில் நகர மக்கள் கலந்துகொண்டு தங்கள் பகுதியில் உள்ள குடிநீர், மின் இணைப்பு, கழிவுநீர் கால்வாய் பிரச்சனைகள் குறித்து கருத்துக்களை முன்வைக்கலாம்.
இந்த கூட்டத்தில் அந்தந்த கவுன்சிலர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். மக்களின் குறைகளை கண்டறிந்து அவற்றுக்கு தீர்வுகாண நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் முதல்வர் அறிவித்திருந்தார். அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் 12 வது வார்டு கவுன்சிலர் சசி ரேகா மிகவும் வித்தியாசமான முறையில் தனது வார்டு மக்களை நகர சபை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.
நகரசபை கூட்டத்திற்கு அழைப்பிதழ் அச்சடித்து, வெற்றிலை, பாக்கு, பழம், குங்குமம் ஆகியவற்றை வைத்து மக்களை நகர சபை கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்திருக்கிறார் சசி ரேகா. வீடு வீடாக சென்று மக்களிடம் நகர சபையின் முக்கியத்துவம் குறித்தும் அவர் எடுத்துக்கூறி அழைப்பிதழை அவர் கொடுத்துள்ளார். சுயேட்சையாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சசி ரேகா முதல்வரின் உத்தரவை நடைமுறைப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளார். இது அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது. இந்நிலையில், மக்களை அவர் சந்தித்து தாம்பூலம் வைத்து நகர சபைக்கு அழைப்பு விடுக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மற்ற செய்திகள்
