‘பெரம்பூர் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்’! .. தொடரும் பதற்றம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Arunachalam | May 23, 2019 05:24 PM
பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.
வட சென்னைக்கு கொண்டு செல்லவேண்டிய வாக்குப்பதிவு இயந்திரம் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு மாறி வந்ததால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, பெரம்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜேஷ் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை 4 சுற்றுகளே முடிவடைந்துள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள ராணி மேரி கல்லூரியில் வடசென்னை மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையும், பெரம்பூர் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்று வருகிறது. ஆனால் இரண்டு தொகுதிக்குமான வாக்கு எண்ணிக்கை தனித்தனியே நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெரம்பூர் தொகுதிக்கு 4 சுற்றுகளுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவடைந்ததையடுத்து அடுத்த 5 வது சுற்று வாக்கு எண்ணிக்கைக்காக இயந்திரத்தை திறந்த போது, அது வட சென்னையில் வாக்குப்பதிவின் போது பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில், வாக்குப்பதிவு இயந்திரத்தை பார்த்து வேட்பாளர்களும், முகவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், வடசென்னை வாக்கு எண்ணும் மையத்திற்கு போக வேண்டிய இந்த இயந்திரம், பெரம்புர் வாக்கு மையத்திற்குள் எப்படி வந்தது என்று அவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, அங்கியிருந்த முகவர்களும், வேட்பாளர்களும் வாக்கு இயந்திரம் மாறி வந்திருப்பதாக தெரிவித்தனர். இதனால் வாக்கு எண்ணிக்கையை தொடரக்கூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.
மேலும், அங்கு வந்த தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பல நேரம் வாக்கு எண்ணும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தொடர்ந்து அதிகாரிகள் முகவர்களிடம் பேச்சு நடத்தி வருகின்றனர்.