சென்னை பெண் டாக்டர் கிஃப்ட் கொடுத்த ‘காஸ்ட்லி வாட்ச்’.. ‘மெமரி கார்டுகள்’.. காசி வீட்டில் சிக்கிய ‘முக்கிய’ ஆவணங்கள்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த இன்ஜினீயர் காசி வீட்டில் சில முக்கிய தடங்கள் சிக்கியுள்ளன.

நாகர்கோவிலை சேர்ந்த இன்ஜினீயரான காசி பெண்களை காதலிப்பதாக கூறி அவர்களுடன் நெருக்கமாக இருக்கும்போது புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அப்படி நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வைத்து சம்பந்தப்பட்ட பெண்ணை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார். அப்படி பணம் தர மறுக்கும் பெண்களின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை நண்பர்களின் உதவியுடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்துள்ளார்.
பெரும்பாலும் பணம் கொடுக்கும் தகுதி உள்ள வி.ஐ.பி குடும்பப் பெண்களை குறிவைத்து காதலிப்பதாக கூறி ஏமாற்றியுள்ளார். அப்படி சென்னையை சேர்ந்த பெண் டாக்டரை ஏமாற்றி பணம் பறித்துள்ளார். மேலும் அவரது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளார். இதுகுறித்து அப்பெண் மருத்துவர் கன்னியாகுமரி காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். இதனை அடுத்து காசி மற்றும் அவருக்கு உதவியாக இருந்த அவரது நண்பர் டேசம் ஜினோ என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து சிறுமி உள்பட நான்கு பெண்கள் காசி மீது புகார் கொடுத்தனர். இதனால் போக்ஸோ வழக்கு உட்பட ஆறு வழக்குகள் காசியின் மீது பதிவானது. இந்த நிலையில் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. தமிழகம், பெங்களூரு உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் காசி பல பெண்களை ஏமாற்றியது விசாரணையில் தெரிய வந்ததால், இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில் சிபிசிஐடி போலீசார் காசி மற்றும் அவரது நண்பர் டேசன் ஜினோவிடம் விசாரணை நடத்துவதற்காக 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்தனர். இருவரையும் அவர்களது வீட்டுக்கும் நேரில் அழைத்து சென்று சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்தனர். அப்போது காசி வீட்டில் இருந்து 3 செல்போன்கள், மெமரி கார்டுகள் மற்றும் சென்னை பெண் டாக்டர் பரிசாக கொடுத்த விலை உயர்ந்த கைக்கடிகாரம் ஆகியவை சிக்கியுள்ளன. மேலும் காசியின் அறையில் இருந்து சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். பெண்களை காதல் வலையில் வீழ்த்தி காரில் வைத்து காசி நெருக்கமாக இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக 6 பேரை பிடித்து விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மற்ற செய்திகள்
