'சிறையில் தந்தை மகன் உயிரிழந்த வழக்கு...' 'உயர்நீதிமன்ற கிளை தானாக முன்வந்து விசாரணை...' விரிவான தகவல்கள்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சாத்தன்குளத்தை சேர்ந்த தந்தை மகன் உயிரிழந்த சம்பவத்தில் மதுரை உயர்நீதிமன்றக் கிளை தானாக முன்வந்து விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ளது
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், அவரின் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த ஜூன் 19-ம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாரை பணி செய்ய விடவில்லை என்ற குற்ற வழக்கில் கைது செய்யப் பட்டனர்.
கைது செய்யப்பட்ட இருவரை ஜூன் 21 தேதி அதிகாலை 2.30 மணிக்கு, இருவரையும் நீதிபதியிடம் வீடியோ அழைப்பு மூலம் ஆஜர் படுத்தி, கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த, பென்னிக்ஸ் கடந்த ஜூன் 22-ம் தேதி மாரடைப்பாலும், கடந்த ஜூன் 23 ஆம் தேதி ஜெயராஜ் காய்ச்சலால் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு முன்பாக இருவரையும் சிறைக்குள் அனுமதிக்கப்பட்ட போது உடலில் காயங்கள் இருந்ததை சிறைத்துறை அதிகாரி உறுதிபடுத்தியுள்ளார்
மேலும் போலீசார் பதிவிட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் ஜெயராஜூம், பென்னிக்ஸும் போலீசார் நடவடிக்கையை தவிர்க்கும் விதமாக தரையில் புரண்டனர் எனவும், அதில் அவர்களுக்கு ஊமைக்காயம் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
தந்தையும் மகனும் அடுத்தடுத்த நாட்களில் மர்மமான முறையில் இறந்துள்ள சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் போலீசாரால் தாக்கப்பட்டு தான் இருவரும் உயிரிழந்ததாக தூத்துக்குடி வணிகர் சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்களின் போராட்டத்தை அடுத்து காவல் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ஜெயராஜின் மனைவி செல்வராணி மனுவை விசாரணை செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, இருவரது உடலையும் 3 மருத்துவர்களைக் கொண்ட குழுவினர் பிரேத பரிசோதனை செய்யவும், அதனை வீடியோ பதிவு செய்யவும் உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் சிறையில் அடைக்க்கப்பட்டு தந்தை மகன் உயிரிழந்த இந்த வழக்கை தாமாக முன்வந்து இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவித்துள்ளது.
ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் வழக்கில் மாநில மனித உரிமைகள் ஆணையம், சிறைத்துறை ஏடிஜிபி-க்கும், உள்துறை செயலாளருக்கும் நோட்டீஸ் அனுப்பி, 4 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும் சிசிடிவி பதிவு உள்ளிட்ட ஆதாரங்களுடன் 8 வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.