"உங்க ஏரியா-ல மின்சாரம் துண்டிப்பா? இத மறக்காம செய்யுங்க".. அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் கோடை காலம் துவங்கியதை அடுத்து மின்சார பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பொதுமக்களுக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் மின் வினியோகம் குறித்து எதிர்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அதற்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி பல்வேறு தகவல்களை முன்வைத்தார்.
இலவச மின்சாரம்
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்த செந்தில் பாலாஜி "இலவச மின் இணைப்பிற்காக விவசாயிகள் காத்திருந்த காலம் முடிந்து விட்டது. இப்போது அனைத்து விவசாயிகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளன. ஒரு லட்சமாவது விவசாயிக்கு முதல்வர் வரும் 16 ஆம் தேதி இலவச மின் இணைப்பு திட்டத்திற்கான ஆணையை வழங்குகிறார். ஒரு லட்சம் விவசாயிகள் ஆன்லைன் வாயிலாக இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள இருக்கிறார்கள்" என்றார்.
மேலும் மின் உற்பத்தி குறித்து பேசிய அவர் "கோடைகாலத்தில் வழக்கமாக மின்சார உபயோகம் அதிகரிக்கும். இதற்கான ஆலோசனை ஏற்கனவே நடத்தப்பட்டிருக்கிறது. அதனடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. நிலக்கரி பற்றாக்குறை காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்படக்கூடாது என்பதன் அடிப்படையில் 4.8 லட்சம் டன் நிலக்கரி கோரி டெண்டர் விடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் அதிகரிக்கும் மின் தேவையை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் 216 துணைமின் நிலையங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த மார்ச் 29ஆம் தேதி 17196 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப் பட்டுள்ளது" என்றார்.
பொதுமக்களுக்கு கோரிக்கை
சட்டசபையில் செந்தில் பாலாஜி பேசுகையில் "தமிழகத்தில் ஆங்காங்கே ஏற்படும் மின் வினியோக பிரச்சனையை சரி செய்யும் நோக்கில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள். மின்வினியோகம் குறித்து சமூக வலைதளங்களில் மின்சார வாரியத்தை டேக் செய்யும்போது உங்களது மின்சார இணைப்பு எண்ணையும் சேர்த்து பதிவிடுங்கள். அப்போது தான் எங்களால் விரைவாக நடவடிக்கை எடுக்க முடியும்" என்றார்.
மேலும், தமிழகத்தில் பராமரிப்பு பணியின் காரணமாகவே மின்சார விநியோகம் அவ்வப்போது நடத்தப்படுவதாகவும் மின் பற்றாக்குறை தமிழகத்தில் இல்லை எனவும் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
Also Read | விண்வெளியில் இதுவரை கண்டுபிடிச்சதுலயே இதுதான் பெருசு.. நாசா வெளியிட்ட புகைப்படம் வைரல்..