மாதாந்திர மின் கட்டணம் செலுத்தும் முறை எப்போது.. அமைச்சர் செந்தில் பாலாஜி சொன்ன குட்நியூஸ்
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை: மாதாந்திர மின் கட்டணம் செலுத்தும் முறை விரைவில் அமலுக்கு வரும் என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மின் கட்டணம் கணக்கிடப்படுகிறது. இந்த முறை காரணமாக குறிப்பிட்ட அளவிற்கு மேல் யூனிட் சென்றால் அவர்கள் இரு மடங்கு கட்டணம் செலுத்தும் நிலை உள்ளது. நடுத்தர வர்க்க மக்கள் பலரும் இரு மடங்கு கட்டணம் செலுத்த இரு மாதத்திற்கு ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை முக்கிய காரணம் ஆகும்
மாதாந்திர மின் கட்டண முறை
மாதாந்திர மின் கட்டண முறை அறிமுகப்படுத்தப்பட்டால், வீட்டு மின் உபயோக நுகர்வோர்ருக்கு மின் கட்டணம் குறையும் என்பதால், திமுக , சட்டசபை தேர்தலின் போது வாக்குறுதி அளித்தது. தற்போது ஆட்சியில் உள்ள திமுக அரசு மாதந்திர மின் கட்டணம் கணக்கீடு முறை எப்போது அமல்படுத்தப்படும் என்பது குறித்து முறையான அறிவிப்பு இதுவரை வெளியிடவில்லை. அதேநேரம் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விரைவில் மாதம் ஒரு முறை மின் கட்டணம் கணக்கிடும் முறை அமல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
மின் கட்டணம் கணக்கீடு எப்படி
தமிழகத்தில் தற்போது வீட்டு உபயோகத்திற்கான மின்சார கட்டணம் எப்படி செய்யப்படுகிறது என்று பார்ப்போம். தற்போது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி முதல் 100 யூனிட்டுகள் இலவசம் அதற்கு மேல் பயன்படுத்தினால் அதற்கான கட்டணம் டெலஸ்கோபிக் டாரிஃப் என்ற முறையில் கணக்கிடப்படுகிறது.
இது என்ன முறை என்கிறீர்களா? உதாரணத்திற்கு நீங்கள் இரண்டு மாதத்திற்கு 150 யூனிட்கள் பயன்படுத்தியிருக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். இதில் முதல் 100 யூனிட்டுகள் இலவசம். அதற்கு மேல் உள்ள 101 - 200 யூனிட்டுகளுக்கு ஒரு யூனிட்டின் விலை 1.5 ரூபாயாகும். இந்த அடிப்படையில் 50 யூனிட்களுக்கு 1.5 ரூபாய் என்று கணக்கிட்டால் 75 ரூபாய், அதனுடன் சேர்த்து நிலையான கட்டணம் என 20 ரூபாய் சேர்த்து 95 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.
400 யூனிட்
அதேநேரம் 400 யூனிட் பயன்படுத்தியிருக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம். முதல் 100 யூனிட் இலவசம் 101 - 200 யூனிட்களுக்கு, ஒரு யூனிட்டுக்கு 2 ரூபாய் கட்டணம். இதன்படி 200 ரூபாய் வசூலிக்கப்படும். 201 - 500 யூனிட்களுக்கு கட்டணம் 3 ரூபாயாகும். இந்த வகையில் நீங்கள் பயன்படுத்தியது 400 யூனிட் என்பதால் 201 - 400 யூனிட்களுக்கு கணக்கிட்டால் 600 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். இதில் மொத்த நிலையான கட்டணம் என்பது 30 ரூபாயாகும். எனவே அப்படி பார்க்கையில் மொத்தத்தில் நீங்கள் செலுத்த வேண்டிய தொகை 30+ 200+600 = 830 ரூபாயாகும்.
500 யூனிட்
ஒருவேளை நீங்கள் 520 யூனிட்டுகள் உபயோகித்தால், முதல் 100 யுனிட்டுகள் இலவசம். அதற்கு மேல் 101 - 200 யூனிட்டுகளுக்கு ஒரு யூனிட்டின் விலை 3.50 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. எனவே 101-200 யூனிட்டுகளுக்கு 350 ரூபாயாக கணக்கில் கொள்ளப்படும். இதே 201 - 500 யூனிட்டுகளுக்கு ஒரு யூனிட்டின் விலை 4.60 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அந்த வீதத்தில் 300 யூனிட்களுக்கு 1,380 ரூபாய் வசூலிக்கப்படும். இதே 500 - 520 யூனிட்டுகளுக்கு ஒரு யூனிட்டின் விலை 6.60 ரூபாயாகும். இந்த வீதத்தில் கணக்கிடும்போது 132 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். இதனுடன் நிலையான கட்டணம் 50 ரூபாய். ஆக மொத்தம் ரூ.50 + 350+ 1380+ 132 = 1,912 ரூபாய் நீங்கள் செலுத்த வேண்டும்.
ஏன் அதிக கட்டணம்
தமிழகத்தில் தற்போது 100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் மக்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவது இல்லை. இதை ஈடுகட்டும் விதமாகவே 100 யூனிட் முதல் 200 யூனிட்க்கு ஒரு கட்டணம். 200 முதல் 500 யூனிட்டுக்கு ஒரு கட்டணம். 500 யூனிட்டுக்கு மேல் ஒரு கட்டணம் என்று வசூலிக்கப்படுகிறது. தற்போது உள்ள மின் கட்டண அணுகுமுறையால் நடுத்தர மக்கள் தான் அதிக கட்டணம் செலுத்தும் நிலை காணப்படுகிறது. அதோடு இரு மாதங்களுக்கு ஒரு முறை கணக்கீடு செய்யப்படுவதால் மக்கள் அதிக கட்டணம் செலுத்தும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
திமுக உறுதி
இந்நிலையில் மாதம் ஒரு முறை மின் கட்டணம் கணக்கிடும் முறை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. அதை நடைமுறைப்படுத்துவதாக வாக்குறுதி அளித்திருந்த திமுக, ஆட்சிக்கு வந்த நிலையில், விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று உறுதி அளித்துள்ளது. மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மாதாந்திர மின் கட்டணம் செல்லும் முறை விரைவில் அமலுக்கு வரும் என்று இன்று செய்தியாளர்களிடம் பேசும் போது உறுதி அளித்துள்ளார்.

மற்ற செய்திகள்
