சார் உங்க செருப்பை கொஞ்சம் கழட்டுங்க.. சென்னை விமான நிலையத்தில் ‘ஷாக்’ கொடுத்த பயணி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை விமான நிலையத்தில் பயணி ஒருவர் நூதன முறையில் தங்கம் கடத்தி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை விமான நிலையத்துக்கு நேற்று சார்ஜாவில் இருந்து பயணிகள் விமானம் ஒன்று வந்துள்ளது. பயணிகள் இறங்கியதும் சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சென்னையைச் சேர்ந்த ஆண் பயணி ஒருவர், தன்னிடம் சுங்கத்தீர்வை செலுத்தும் எந்த பொருட்களும் இல்லை என கூறியுள்ளார். பின்னர் கிரீன் சேனல் வழியாக வெளியே வேகமாக நடந்து சென்றுள்ளார்.
அப்போது அந்த பயணியின் நடை சற்று வித்யாசமாக இருந்ததால் சந்தேகமடைந்த சுங்க அதிகாரிகள், அவரின் காலணிகளை கழற்றி சோதனையிட்டுள்ளனர். ஆனால் அதில் சந்தேகத்துக்கு உரிய எந்த பொருளும் இல்லை. ஆனாலும் சந்தேகம் தீராததால், அவரது இரண்டு கால்களையும் தூக்கி காட்ட கூறியுள்ளனர். அதில் அவரது கால்களின் அடிப்பாதங்களில் பிளாஸ்திரி போட்டு ஒட்டப்பட்டிருந்தது.
அதை பிரித்து பார்த்தபோது, தங்கப்பசை அடங்கிய சிறிய பார்சல் மறைத்து வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டு பிடித்தனர். இதனை அடுத்து அவரிடமிருந்து சுமார் 240 கிராம் தங்கப்பசையை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் 12 லட்ச ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தங்கம் கடத்தி வந்த பயணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

மற்ற செய்திகள்
