"மே 18-ல் விடுதலை.. பேரறிவாளன், அற்புதம் அம்மாள் தாங்களே போராடி பெற்ற வெற்றி இது!" - சீமான் EXCLUSIVE பேட்டி.
முகப்பு > செய்திகள் > தமிழகம்முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட பேரறிவாளன் 31 ஆண்டுகால சிறை வாசத்திற்கு பின்னர் தற்போது விடுதலையானது குறித்து இந்தியாவே பரபரப்புடன் பேசிவருகிறது.
இதுகுறித்து நம்முடைய பிஹைண்ட்வுட்ஸ் செய்திப்பிரிவுக்கு, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரத்தியேகமாக அளித்த பேட்டியில், “எனது அன்பு தம்பி பேரறிவாளனின் விடுதலை எனக்கு மகிழ்ச்சி தரக்கூடியது. இன உணர்வும், மான உணர்வுமுள்ள ஒவ்வொரு தமிழ் பிள்ளைகளுக்கும் தமிழர்களுக்கும் பெரு மகிழ்ச்சி தரும் செய்தி இது.
இதற்கு பின்னால் இருக்கிற வலிகள் தோய்ந்த காயங்களையும் கண்ணீரையும் கணக்கில் எடுக்க முடியாது. அவ்வளவு வலி, வேதனை, சுமை இதில் இருக்கிறது. 31 ஆண்டுகள் சட்டப் போராட்டம், அரசியல் போராட்டம், இவை எல்லாவற்றையும் விட மேலாக என்னுடைய தாய் அற்புதம் அம்மாள் அவர்கள், ஏறாத தலைவர்களின் வீட்டு படி கிடையாது, பிடித்துக் கெஞ்சாத கைகள் கிடையாது, கால்கள் தேய தேய நடந்து நடந்து 30 ஆண்டுகள் தொடர்ச்சியாக அவர் பயணித்த அந்த பெரும் பயணத்தின் இனிய முடிவு தான் இந்த விடுதலை. இதில் சாதித்தவர் என்னுடைய தாயார் அற்புதம் அம்மாள், சாதித்தவர் வீரத்தமிழச்சி செங்கொடி.
தன்னுடைய விடுதலைக்கு தானே போராடி, சட்ட நுணுக்கங்களைக் கற்று, சட்டமறிந்த மேதைகளை சந்தித்து, அவரே தனக்கான வழக்கை உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் பிரபு, பாரி போன்ற என்னுடைய தம்பிகளை வைத்துக்கொண்டு இந்த வழக்கை எதிர்கொண்டுள்ளார். பலமுறை வழக்கு தொடுத்து இந்த முறை தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து வழக்கு தொடுத்தார். தனக்கான விடுதலையை தானே போராடி பேரறிவாளன் பெற்றுள்ளார் என்பதுதான் இதில் இருக்கும் உண்மை.
அவருடைய விடுதலைக்காக எல்லோரும் போராடினோம், நாம் துணை நின்றோம், ஆதரவாக நின்று குரல் எழுப்பினோம்.. ஆனால் இந்த விடுதலை, தாய் அற்புதம் அம்மாளும், தம்பி பேரறிவாளனும் போராடி பெற்றது என்பதுதான் உண்மை. இனப் படுகொலை நாளான மே 18-ஆகிய இன்று மகிழ்ச்சியான செய்தியாக இந்த செய்தி வந்திருக்கிறது. இந்த நாளை நாங்கள் தமிழர்கள் எழுச்சி நாளாக அனுசரிக்க காரணம், விழுவதெல்லாம் எழுவதற்காக என்கிற தத்துவத்தை எங்களுடைய தலைவர் எங்களுக்கு கற்றுக் கொடுத்து விட்டுச் சென்றிருக்கிறார்.
அந்த அடிப்படையில் இந்த நாளில் இப்படி ஒரு தீர்ப்பு வந்திருப்பது என்பது மன மகிழ்ச்சியை தருகிறது. மீதம் இருக்கிற ஆறு பேர் விடுதலை செய்யப்படுவதற்கு இந்த தீர்ப்பே போதுமானது என்பது சட்ட நிபுணர்களின் கருத்து. காலம் தாமதிக்காமல் தமிழக அரசு ஏற்கனவே நீண்ட காலம் சிறை தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் மீதமிருக்கும் 6 பேரையும் விடுதலை செய்வதற்கு ஆவன செய்யவேண்டும். இனிமேலாவது இவர்கள் வெளியில் வருவதற்கு மனச்சான்றுள்ள ஒவ்வொருவரும் இடையூறு செய்யாமல் இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.
இந்த தம்பியின் விடுதலை செய்தி எதிர்பார்த்ததுதான். நீதிபதியின் தர்க்கம், அவர்கள் எடுத்து முன்வைத்த கேள்வி, அதற்கு பதில் தர முடியாமல் அரசு தரப்பு திணறியதையெல்லாம் பார்க்கும்போது இந்த தீர்ப்பு வரும் என்று நாங்கள் முன்கூட்டியே கணித்ததுதான். இது குறித்து தம்பி பேரறிவாளனிடம் பேசியதுடன், இந்த முடிவை எதிர்பார்த்து மகிழ்ச்சியுடன் காத்துக்கொண்டு இருந்தோம். அதன்படி இந்த தீர்ப்பு வந்திருப்பது மகிழ்வைத் தருகிறது. நீதியின்பால் உள்ள நம்பிக்கை முற்றுமுழுதாக பட்டுப்போய்விடவில்லை என்பதை இந்த தீர்ப்பு காட்டுகிறது! தம்பி பேரறிவாளனுக்கும், என்னுடைய தாய் அற்புதம் அம்மாளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!” என்று குறிப்பிட்டுள்ளார்.