மணிக்கு ‘11 கி.மீ’ வேகத்தில் வரும் நிவர் புயல்.. கரையை கடக்கும்போது காற்று எவ்வளவு வேகமாக வீசும்..? வானிலை மையம் ‘முக்கிய’ தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நிவர் புயலின் வேகம் அதிகரித்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை நிவர் புயல் கரையை கடக்கும் என்றும், புயலின் தாக்கம் இன்று இரவு முதல் அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போது நிவர் புயலின் வேகம் மணிக்கு 7 கிலோமீட்டரில் இருந்து 11 கிலோமீட்டராக அதிகரித்து, வடமேற்கு திசையில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கடலூரில் இருந்து 240 கிலோமீட்டர் தூரத்திலும், புதுச்சேரியில் இருந்து 250 கிலோமீட்டர் தூரத்திலும், சென்னையில் இருந்து 300 கிலோமீட்டர் தொலைவிலும் நிவர் புயலானது மையம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயலின் சுழல் வேகம் மணிக்கு 105 கிலோமீட்டர் முதல் 115 கிலோமீட்டர் வரை உள்ளதாகவும், புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 155 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் கனமழை தொடரும் என்றும், காற்றின் வேகம் படிப்படியாக அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்
