'டாக்டருக்கு வந்த விபரீத ஆசை'... 'பகடைக்காயாக மகளின் வாழ்க்கையை வைத்த தந்தை'... 'அப்பாவி இளம்பெண்' சிக்கியதன் பின்னணி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தந்தையின் பேராசையால் மகள் சிறை சென்ற பரிதாப சம்பவம் அரங்கேறியுள்ளது. அதை விவரிக்கின்றது இந்த செய்தி குறிப்பு.
2020-2021ம் ஆண்டிற்கான மருத்துவப் படிப்பு கலந்தாய்வில் டிசம்பர் 7ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த மாணவி திவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கலந்து கொண்டார்.
நீட் தேர்வில் 610 மதிப்பெண்கள் எடுத்து உள்ளதாக அவர் சமர்ப்பித்த சான்றிதழை பரிசோதித்தபோது, அது போலி எனத் தெரியவந்தது.
நீட் தேர்வில் வெறும் 27 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்ததும், ஜனனி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவியின் சான்றிதழில் பெயரையும் சீரியல் எண்ணையும் மாற்றி போலி சான்றிதழ் சமர்ப்பித்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, 6 பிரிவுகளின் கீழ் மாணவி, அவரது தந்தை பாலச்சந்திரன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
பெங்களூருவில் பதுங்கியிருந்த மாணவியின் தந்தை பாலச்சந்திரன், ஜனவரி 1ம் தேதி கைது செய்யப்பட்டார். பல் மருத்துவரான பாலச்சந்திரன் தன் மகளை எப்படியாவது மருத்துவப் படிப்பில் சேர்த்து விட வேண்டும் என்று நினைத்தார். ஆனால், நீட் தேர்வில் திவ்யா 27 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்ததால் நண்பர்களிடம் புலம்பியுள்ளார்.
அப்போது தான் இடைத்தரகர் ஜெயராமனின் அறிமுகம் பாலச்சந்திரனுக்கு கிடைத்தது. அவர் போலி சான்றிதழ் மூலம் திவ்யாவுக்கு நீட் படிப்பில் சேர்த்து விட முடியும் என நம்பிக்கை ஊட்டி முன்பணமாக 25000 ரூபாய் வாங்கியுள்ளார்.
சொன்னபடி இரண்டே நாட்களில் போலி சான்றிதழையும், போலி அழைப்பு சான்றிதழையும் தயாரித்துக் கொடுத்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில், பெங்களூருவில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த மாணவி திவ்யாவை, போலீசார் திங்களன்று கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பிப்ரவரி 1ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து, மாணவி திவ்யா புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
எப்படியாவது மகள் மருத்துவர் ஆக வேண்டும் என்ற தந்தையின் பேராசை, அவரது மகளை தற்போது சிறைக்கு அனுப்பியதோடு, அவர் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.