வருஷா வருஷம் கோடிக்கணக்குல 'கல்லா' கட்டுவோம்... 35 வருஷத்துல இதான் மொதல் தடவ... கதறும் விவசாயிகள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்35 வருடங்களில் முதல் முறையாக மொய் விருந்து விழாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றன.

கடந்த 1985-ம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியில் மொய் விருந்து நடத்தப்பட்டது. 1990-களில் இது படிப்படியாக விரிவடைந்து புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஆலங்குடி, நெடுவாசல், கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு, மாங்காடு, அணவயல், குளமங்கலம், பனங்குளம், நெய்வத்தளி, பாண்டிக்குடி, மேற்பனைக்காடு, செரியலூர், வேம்பங்குடி, பைங்கால் ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்டது.
வருடாவருடம் மே மாதம் தொடங்கி ஆவணி மாதம் வரை இந்த மொய் விருந்து விழாக்கள் நடைபெறும். வசதிக்கேற்ப கூட்டணியாகவோ இல்லை தனித்தனியாகவோ வீடுகள் மற்றும் மண்டபங்களில் இந்த விழா நடைபெறும். ஆட்டுக்கறி குழம்பு, சிக்கன், முட்டை, எலும்பு ரசம், கூட்டு என நாவூறும் பதார்த்தங்களுடன் இந்த விருந்து சாப்பாடு இருக்கும்.
சொந்தக்காரர்கள் விழா நடைபெறும் இடத்திற்கு வந்து சாப்பிட்டு மொய் என ஒரு தொகையை எழுதி செல்வர். இதற்காக ஆங்காங்கே பெரிய சில்வர் சட்டிகளுடன் உறவினர்கள் அமர்ந்து இருப்பர். வசூலாகும் பணம் அதில் போட்டு வைக்கப்பட்டு கடைசியாக விழா நடத்துவோரிடம் ஒப்படைக்கப்படும். சிலர் கோடிக்கணக்கான ரூபாயை மொய்யாக பிடிப்பர். செலவு போக மீதத்தொகையை ஏதேனும் இடம் அல்லது தொழில்களில் முதலீடு செய்வர்.
இந்த நிலையில் கொரோனா காரணமாக இந்த ஆண்டு மொய் விருந்து விழாக்கள் தடைபட்டு உள்ளன. கடந்த ஆண்டு வரை தஞ்சை, புதுக்கோட்டை என 2 மாவட்டங்களிலும் சேர்த்து சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரை மொய் விருந்து வசூல் கிடைத்துள்ளது. அதேபோல் சமையல் கலைஞர்கள், ஆட்டுக்கறி, அரிசி, விறகு தொடர்பான தொழில் செய்பவர்கள், மொய் எழுத்தர்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் பயனடைந்துள்ளனர். ஒரு தனி நபரின் அதிக பட்ச மொய் வசூல் ரூ.5 கோடி வரை கடந்த ஆண்டு வசூல் செய்யப்பட்டது.
2018-ம் ஆண்டு கஜா புயலால் மொய் விருந்து வசூல் கொஞ்சம் தடைபட்டது. ஆனால் இந்த ஆண்டு கொரோனாவால் மொத்தமாக நடத்த முடியாத சூழல் உருவாகி உள்ளது. இதனால் வரும் தை மாதத்தில் கொஞ்சம், கொஞ்சமாக இந்த விழாக்களை நடத்தலாம் என விவசாயிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். 35 வருடங்களில் முதல்முறையாக மொய்விருந்து விழாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
