'இங்கு மட்டும் உயிரிழப்பு இல்ல'... 'விரைவாக குணமாகும் சர்க்கரை நோயாளிகள்'... 'அப்படி என்ன தான் இருக்கு'?... சென்னைவாசிகள் வந்து குவியும் கொரோனா முகாம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா நோய்க்குச் சிகிச்சை பெறச் சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஜவகர் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா மருத்துவ முகாமில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வரும் 31ம் தேதியுடன் ஊரடங்கு முடியவுள்ள நிலையில், அரசு அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பது மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், சாலிகிராமத்தில் உள்ள ஜவகர் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சித்த மருத்துவ முகாமில் தினமும் ஏராளமானோர் குவிந்து வருகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் இங்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை. இங்கு சித்த மருத்துவ முறையில் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஜூன் மாதம் 3-ந் தேதி இந்த மருத்துவ முகாம் தொடங்கிய நிலையில், இங்கு ஆரம்பத்தில், 50 முதல் 70 பேர் சிகிச்சை பெற்று வந்தார்கள். தற்போது இங்கு நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவ முகாம் குறித்து சித்தா மருத்துவர் வீரபாபு கூறும்போது, ஜூன் 3-ந் தேதி 250 படுக்கைகளுடன் தொடங்கிய இந்த மருத்துவ முகாமில் மக்கள் வரத்து அதிகரிக்க அதிகரிக்க 50, 50 படுக்கைகளாக அதிகரித்து தற்போது 465 படுக்கை வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. மேற்கொண்டு இட வசதி இல்லாத காரணத்தால் படுக்கை வசதியை அதிகரிக்க முடியவில்லை.
இங்குக் காய்ச்சலுக்கு மட்டும் ‘பாரசிட்டமால்’ என்ற ஆங்கில மருந்து கொடுக்கப்படுகிறது. அதனைத் தவிர்த்து கபசுர குடிநீர், சிறப்பு மூலிகை தேனீர் மற்றும் நோயாளியின் தன்மைக்கு ஏற்ப ஏனைய சித்த மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் உடலில் ஏதேனும் துணை நோய் இருந்தால் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படும் போது மரணமடைவதாகக் கூறப்படுகிறது. ஆனால், இங்குச் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், தைராய்டு, சிறுநீரக பாதிப்பு போன்ற பக்க நோய்கள் உள்ளவர்களும் சிகிச்சை பெற்று குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். எனவே, எந்த துணை நோய் உள்ளவர்கள் என்றாலும், இங்கு வந்தால் அவர்களுக்குச் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படும்.
இங்கு முக்கியமான அம்சம் என்னவென்றால், இங்குச் சிகிச்சை அளிக்கப்பட்டவர்களில் இதுவரை யாரும் உயிர் இழக்கவில்லை என்பது இந்த மருத்துவ முகாமின் சிறப்பாகும். இந்த முகாமில் ஏராளமான காவல்துறை அதிகாரிகள், மற்றும் அரசு உயர் அதிகாரிகள் சிகிச்சை பெற்றுத் திரும்பியுள்ளார்கள். தற்போது வரை 2,425 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. 1,963 நோயாளிகள் இதுவரை குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 462 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்'' என மருத்துவர் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
