"இந்த அரசு இத பின்பற்றல... அதன் விளைவுதான் இந்த இரட்டைக்கொலை!"... தோண்டி எடுத்த மக்கள் நீதி மய்யம்! பரபரப்பை கிளப்பிய அறிக்கை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சாத்தான்குளம் இரட்டைக் கொலை தொடர்பாக நீதிமன்றத்தை நாடியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய அறிக்கை வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை:
சாத்தான்குளம் தந்தை-மகன் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தை தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சி சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிப் பேராணை மனுவை தாக்கல் செய்தது.
அம்மனுவானது தமிழ்நாடு காவல்துறை சீர்திருத்த சட்டம் 2013-ன் படி நிறுவப்பட்டுள்ள காவல்துறை புகார் ஆணையத்தின் அமைப்பு எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அச்சட்டம் முறையானதாக இல்லை என்றும் நடைமுறைத் தன்மைக்கு போதுமானதாக இல்லை என்றும் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களுக்கு புறம்பானதாகவும் அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி காவல்துறை புகார் ஆணையமானது மாநில தலைமை ஆணையர் மற்றும் மாவட்ட வாரியான ஆணையங்களாக அமைக்கப்பட வேண்டும்.
மாநில தலைமை ஆணையத்தில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகளையோ அல்லது உயர் நீதிமன்ற நீதிபதிகளையோ பணியமர்த்த வேண்டும் என்றும், மாவட்ட வாரியான ஆணையங்களில் ஓய்வு பெற்ற நீதிபதி அல்லது ஓய்வு பெற்ற காவலர் அல்லாத அரசு ஊழியர்களை பணியமர்த்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் இருக்கும் பட்சத்தில், இந்த அரசு அவ்வழிகாட்டுதலுக்கு மாறாக செயல்பட்டதன் விளைவு இந்த இரட்டை படுகொலை சம்பவம்.
இந்த அரசு ஆணையங்கள் அமைத்து அதில் காவல் அதிகாரிகளையே நிர்வாகிகளாக பணியமர்த்தி உள்ளதுதான் இதன் தோல்விக்கு காரணம். அதுமட்டுமன்றி இவ்வாறு செய்தது இந்திய அரசமைப்பு சட்டத்திற்கும், அதன் சரத்துக்களுக்கும் எதிரானதாக உள்ளது. அதனாலேயே மக்கள் நீதி மய்யம் இந்த அரசின் மெத்தனப் போக்கை எதிர்த்து மேற்கண்ட சட்டத்தை திருத்தி ஆணை அமைப்பை மாற்றி அமைக்க நீதிமன்றங்களின் கதவுகளைத் தட்ட நேர்ந்துள்ளது” என்று மக்கள் நீதி மையத்தின் ஊடகப்பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.