'படிச்சது அண்ணா யூனிவர்சிட்டி'...'கோட் சூட்டில் கெத்தாக நின்ற இந்த தமிழர் யார்'?... சுவாரசிய தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Jeno | Oct 12, 2019 11:33 AM
மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் இடையே நடந்த சந்திப்பின் போது, உடனிருந்த தமிழகத்தை சேர்ந்த அதிகாரி குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
இந்தியா வந்துள்ள சீன அதிபர் ஸி ஜின்பிங், பிரதமர் மோடியை மாமல்லபுரத்தில் சந்தித்து பேசினார். அதிகாரபூர்வமற்ற சந்திப்பு என்பதால் இரு தலைவர்களும் எந்தவித குறிப்புகளும் இன்றி உரையாடி கொண்டார்கள். மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை பார்வையிட்ட இரு தலைவர்களும், அங்கு நடந்து சென்றவாறே பேசி கொண்டனர்.
இதனிடையே இரு தலைவர்களும் சந்தித்து கொண்டபோது அதிகாரிகள் சிலரும் உடனிருந்தனர். அப்போது கோட் சூட் அணிந்து கொண்டு பிரதமர் மோடியின் உடனே சென்ற அதிகாரி குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. சீனாவில் உள்ள இந்திய தூதரகத்தின் முதன்மை செயலராக பணியாற்றி வரும் மதுசூதன் ரவீந்திரன், தமிழகத்தை சேர்ந்தவர். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பு முடிந்த மதுசூதன் கடந்த 2007ஆம் ஆண்டு மத்திய குடிமை பணி தேர்வில் தேர்ச்சி பெற்று, இந்திய வெளியுறவுப் பணியில் சேர்ந்தார்.
சீனாவிலுள்ள இந்திய தூதரகத்தின் மூன்றாம் நிலை செயலராக பணியாற்றி வந்த மதுசூதன், பின்னர் சான் பிரான்சிஸ்கோவிக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து கடந்த 2013ஆம் ஆண்டு மீண்டும் சீனாவிற்கு மாற்றப்பட்ட அவர், சீனாவில் நீண்ட காலம் பணியாற்றியதால், அந்நாட்டின் அதிகாரப்பூர்வ மொழியான மாண்டரின் மொழியினை நன்கு கற்று கொண்டார். இதனிடையே கடந்த ஆண்டு சீனாவில் அந்நாட்டு அதிபர் ஸி ஜின்பிங்யை, பிரதமர் மோடி சந்தித்தபோது மொழிப் பெயர்ப்பாளராக மதுசூதன் செயல்பட்டார்.
இதற்கிடையே தற்போது சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்தின் முதன்மைச் செயலராக பணியாற்றி வரும் மதுசூதன், தமிழக பாரம்பரியத்தை இரு தலைவர்களுக்கும் மொழி பெயர்ப்பு செய்து எடுத்து கூறியது பலரது கவனத்தையும் கவர்ந்துள்ளது.