"நான்காண்டு தாமதம்".. "உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஒரு படிப்பினை".. அறுவர் விடுதலையில் கமல்ஹாசன் கருத்து!
முகப்பு > செய்திகள் > இந்தியாநளினி உள்ளிட்ட 6 பேரின் விடுதலை குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பினை வரவேற்று மக்கள் நீதி மய்யம் கட்சி நிறுவனர் கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.

முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ்காந்தி கடந்த 1991-ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 26 நபர்களுக்கு 1998-ம் ஆண்டு சென்னை பூவிருந்தவல்லி தடா நீதிமன்றம் உச்சபட்ச தண்டனை விதித்தது.
பின்னர் மேல்முறையீடு வழக்கில் சாந்தன், முருகன், நளினி, பேரறிவாளனுக்கு மட்டும் உச்சபட்ச தண்டனை உறுதியானது. இதனை தொடர்ந்து, 2000 ஆம் ஆண்டில் நளினிக்கும், 2014 ஆம் ஆண்டு பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கும் உச்சபட்ச தண்டனை ஆயுள் தண்டனையாக நீதிமன்றத்தால் குறைக்கப்பட்டது.
இச்சூழலில் தன்னை விடுவிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார் பேரறிவாளன். இந்த வழக்கில் கடந்த மே.18 ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த பேரறிவாளனை சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி விடுதலை செய்து உத்தரவிட்டது.
இதே சட்டப்பிரிவின் கீழ், தங்களையும் விடுதலை செய்யவேண்டும் என நளினி உள்ளிட்ட 6 பேர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் இதுக்குறித்து தமிழக மற்றும் மத்திய அரசு பதில் அளிக்குமாறு கடந்த மாதம் 26 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற விசாரணையில் வழக்கு 11 ஆம் தேதி (இன்று) ஒத்திவைக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் நளினி உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட தீர்ப்பின் அடிப்படையிலும், 30 ஆண்டுகளாக சிறை தண்டனை , ஆறு பேரின் நன்னடத்தை , சிறையில் கல்வி கற்றது, பரோல் விதிமுறையை மீறாதது, ஆளுநரின் தாமதம் ஆகியவற்றின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த தீர்ப்பு குறித்து கமல்ஹாசன் ட்விட்டர் ட்வீட் செய்துள்ளார். அதில், "தமிழக அமைச்சரவை 2018-ல் நிறைவேற்றிய தீர்மானத்தை ஆளுநர் ஏற்றுக்கொண்டிருந்தால் அறுவர் விடுதலையில் நான்காண்டு தாமதம் தவிர்க்கப்பட்டிருக்கும். மாநில அரசின் முடிவுகளில் குறுக்கீடு செய்யும் ஆளுநர்களுக்கு உச்சநீதின்றத்தின் தீர்ப்பு ஒரு படிப்பினை. நியமனப் பதவியில் இருப்போர் மாநில அரசின் முடிவுகளுக்கு இடையூறு செய்வதை நிறுத்திக்கொள்ளவேண்டும்." என கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.

மற்ற செய்திகள்
