என்கிட்ட யாராச்சும் சொல்லிருக்கலாம்ல...? கடைசிவர அவுங்க முகத்தக்கூட பார்க்க முடியாத மாதிரி பண்ணிட்டீங்களேடா...! நெகிழ்ச்சியான சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Jan 24, 2020 03:44 PM

பேராவூரணி அருகே விபத்து ஒன்றில் இறந்த தனது தாயைப் பற்றித் தகவல் தெரிவிக்காமலேயே உடலை அடக்கம் செய்து விட்டதாக மகன் ஒருவர் போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார்.

Is information buried in the son of the mother\'s mysterious death

பேராவூரணி அருகே உள்ள புனல்வாசல் பிலாக்கொல்லைமேடு பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சலை - ராமையன் தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் இருந்துள்ளனர். இந்நிலையில் ராமையன் அவரது ஒரு மகன் மற்றும் மகள் ஆகியோர் உயிரிழந்துவிட்டனர்.

இதையடுத்து அதே பகுதியில் சாலையோரத்தில் குடிசை அமைத்து வசித்து வந்தார் அஞ்சலை. இவரது மற்றொரு மகனான ராஜா துறவிக்காட்டில் குடியேறி வசித்து வந்தார். அவ்வப்போது தன்னுடைய அம்மாவின் வீட்டுக்குச் சென்று பார்த்து வருவதுடன் வேண்டியவற்றையும் வாங்கிக் கொடுத்துவிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், அஞ்சலை கடந்த 18ம் தேதி, வீட்டின் அருகே உள்ள கடைக்கு டீ குடிப்பதற்காகச் சென்றிருக்கிறார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதிய விபத்தில் அஞ்சலைக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றபோது இறந்து விட்டார்.

அஞ்சலையின் உடலை லோடு ஆட்டோவில் ஏற்றி வந்த சிலர், அவருடைய மகனான ராஜாவுக்குத் தகவல் கொடுக்காமலேயே அன்று இரவே ஒட்டங்காடு பகுதியில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் புதைத்து விட்டனர். இதையடுத்து தனது தாய் இறந்ததும் அவர் புதைக்கப்பட்ட தகவலும் ராஜாவுக்கு அடுத்த நாள்தான் தெரிய வருகிறது.

உடனே கல்லறைக்குச் சென்ற ராஜா, தனது தாய் புதைக்கப்பட்ட இடத்தில் மண்டியிட்டு அழுதிருக்கிறார். பின்னர் அஞ்சலை வசித்த பகுதிக்குச் சென்று, `எப்படி என் அம்மா இறந்தார், ஏன் எனக்கு தகவல் சொல்லவில்லை, கடைசியாக அவர் முகத்தைப் பார்க்கக்கூட முடியாமல் செய்து விட்டீர்களே?' எனக் கதறிவாறே கோபத்துடன் கேட்டுள்ளார். அதற்கு யாரும் சரியான பதிலைச் சொல்லவில்லை.

இதையடுத்து, `தனது தாயின் இறப்புக்குக் காரணமான விபத்து ஏற்படுத்திய வாகனத்தையும் அதில் சம்மந்தப்பட்டவர்களையும் கைது செய்ய வேண்டும் என்றும் தனது தாயின் உடலைத் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் தெரியாமல் நள்ளிரவில் புதைக்க வேண்டிய அவசியமென்ன என்பதையும் விசாரித்து இதில் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்ய வேண்டும்' எனத் திருச்சிற்றம்பலம் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். அத்துடன் அஞ்சலை புதைக்கப்பட்ட 6 நாள்கள் கழித்து, அதிகாரிகள் முன்னிலையில் இன்று அவரின் உடலைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. மற்ற விவரங்கள் விசாரணைக்குப் பிறகே தெரிய வரும் என போலீஸார் தெரிவிக்கின்றனர்.

Tags : #DEATH