பொங்கல் தொகுப்பில் ஹிந்தி எழுத்துகள் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு தமிழ்நாடு அமைச்சர் சக்கரபாணி பதில் அளித்துள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
2.15 கோடி அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் இந்த பொங்கல் தொகுப்பு திட்டம் மாநில உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் 505 ரூபாய் மதிப்புள்ள 20 பொருட்கள் நிறைந்த தொகுப்பு பொங்கல் பரிசாக வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பில் சில பொருட்களில் ஹிந்தி மொழியில் பெயர்கள் அச்சிடப்பட்டு இருப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சுமத்தி இருந்தார். இதற்கு தற்போது அமைச்சர் சக்கரபாணி பதில் அளித்துள்ளார்.
அமைச்சர் சக்கரபாணி கூறுகையில், "பொங்கல் தொகுப்பில் இடம் பெற்றுள்ள கோதுமை, ரவை ஆகிய பொருட்கள் வட இந்திய மாநிலங்களில் இருந்து தான் வாங்கப்படுகிறது. அரசின் நிர்வாக நடைமுறைகள் நன்கு தெரிந்து இருந்தும் இது போல் குற்றம் சுமத்துகிறார்கள். பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து அதிமுக-வினர் சமுக வலைதளங்களில் போலியான தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள்.
பொய்யான தகவல்களைப் பரப்புவோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் கடும் நடவடிக்கைக்கு உள்ளாவார்கள்" என்று குறிப்பிட்டார்.

மற்ற செய்திகள்
