'என்னங்க, பேசும் போதெல்லாம் இத தானே சொல்லுவீங்க'... 'வீர மகனின் மனசுல இருந்த ஆசை'... தொண்டை அடைக்க கதறி அழுத மனைவி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் பழனியின் மனைவி, கணவர் குறித்தும் அவரது ஆசை குறித்தும் உருக்கமாகக் கூறியுள்ளார்.
லடாக் பகுதியில் இந்தியா-சீன எல்லையில் ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவ அதிகாரி உள்பட 3 வீரர்கள் வீரமரணம் அடைந்த நிலையில், அதில் ராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த பழனியும் ஒருவர். கடந்த 1999-ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்த பழனி, 22 ஆண்டுகள் ராணுவத்தில் சிறப்பாக பணியாற்றி துணை ஹவில்தார் அந்தஸ்துக்கு உயர்ந்தார்.
இதனிடையே கடந்த ஏப்ரல் மாதம் விடுமுறை கிடைத்த நிலையில், ஊருக்கு வந்து குடும்பத்துடன் நேரத்தைச் செலவிட்டார். அப்போது தான் இந்திய-சீன எல்லையில் ஏற்பட்டது. இதையடுத்து ராணுவ உயர் அதிகாரிகள் அவசரமாக அழைத்ததைத் தொடர்ந்து உடனடியாக புறப்பட்டுச் சென்று பணியில் சேர்ந்தார். பணியிலிருந்த அவர் தற்போது வீர மரணம் அடைந்துள்ளார்.
அவருக்கு வானதிதேவி என்ற மனைவியும், பிரசன்னா என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர். பழனியின் மறைவு அவரது குடும்பத்தை மட்டுமல்லாது, அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பீரங்கி மூலம் குறிபார்த்துச் சுடுவதில் திறமை கொண்ட பழனியை, முக்கிய எல்லைப் பகுதியில் உயர் அதிகாரிகள் பணிக்கு அமர்த்தியிருந்தனர்.
இதனிடையே தனது கணவரின் ஆசை குறித்துப் பேசிய அவரது மனைவி வானதிதேவி, ''என்னிடம் எப்போது பேசினாலும் மகனையும் ராணுவத்தில் சேர்த்து நாட்டுக்காகப் பணி செய்ய அர்ப்பணிக்க வேண்டும். அது தான் அவருடைய பெரிய ஆசையாகவே இருந்தது. ஆனால் அதைப் பார்க்காமலே அவர் போய் விட்டார்'' எனக் கூறி கதறி அழுதார்.
எம்.காம் பட்டதாரியான வானதிதேவிக்கு அரசு வேலை வழங்கி, அவரது குழந்தைகளின் எதிர்கால கல்விக்கும் தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என அந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.