"நள்ளிரவில் நரி ஊளையிட்டது.. ரயிலோடு, பாம்பன் பாலத்தையே கடல் அடிச்சுட்டு போச்சு".. 56 வருஷத்துக்கு முன் ராமேஸ்வரம் கோரப்புயலை நேரில் சந்தித்த ‘ஜெமினி - சாவித்ரி’யின் ‘திக் திக்’ அனுபவங்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இலங்கை அருகே வங்க கடலில் உருவாகி தமிழக கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களை மிரட்டி வரும் புரெவி புயல், வரும் 4-ம் தேதி அதிகாலை பாம்பன் - கன்னியாகுமரி இடையே கரையைக் கடக்கிறது. இதனால் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 56 ஆண்டுகளுக்கு முன் தெற்கு அந்தமான் கடலில் உருவான புயலால், தனுஷ்கோடிக்கு நேர்ந்த சில தகவல்கள் ஆச்சர்யப்படுத்தும் விதமாக இருக்கின்றன.
பிரிட்டிஷ் இந்தியாவுக்கும் முன்னும் பின்னும் முக்கிய துறைமுக நகராக விளங்கிய தனுஷ்கோடி, பிழைப்பு தேடி வெளிநாடு செல்லும் தொழிலாளர்களுக்கும், இலங்கை என்கிற மலைப்பகுதியை பொன்விளையும் பூமியாக்கும் நோக்கில் பல்லாயிரம் இந்தியர்களை அடிமைகளாக கொண்டு செல்வதற்கான வழியாகவும் இருந்திருக்கிறது. இத்தனை சிறப்பு வாயந்த தனுஷ்கோடியை தான், ஒரே இரவில் புரட்டிப் போட்டது அந்த பேரலை. 1964 டிசம்பர் 23-ம் தேதி தூங்கிக் கொண்டிருந்தவர்களையும், ரயிலில் பயணித்த நூற்றுக்கணக்கானவர்களையும் ஒரு சேர கடலுக்குள் இழுத்துக்கொண்டது அந்த கோரப்பேரலை.
துறைமுகக் கட்டடங்கள், ரயில்வே நிலையம், தேவாலயங்கள், கோயில்கள், மசூதிகள், நிர்வாக அலுவலகங்கள், குடியிருப்புகள் என பலவும் சிதிலமடைந்தது போக எஞ்சியது சில கட்டடங்கள் மட்டுமே. முன்னதாக இலங்கையை நோக்கி திரும்பிய அந்த புயல் டிசம்பர் 22-ம் தேதி அங்கு தமிழர்கள் இருந்த பகுதிகளை தனது அகோர பசிக்கு விழுங்கியது. தொலைத்தொடர்பு கம்பங்கள், தந்தி சேவைகள் செயலிழந்ததால், 2 நாள்களுக்குப் பிறகுதான் இந்த தகவல்களே வெளிவந்தன.
56 ஆண்டுகளுக்கு முன்பு துறைமுக நகரமான தனுஷ்கோடியில் நடந்த இந்த கோரத்தை, மறைந்த காதல் மன்னன் ஜெமினி கணேசன் - நடிகையர் திலகம் சாவித்திரி தம்பதி நேரில் பார்த்தனர். இதுபற்றி ஒரு நேர்காணலில், தெரிவித்திருந்த ஜெமினி கணேசன், “சென்னையிலிருந்து படப்பிடிப்புக்காகக் கிளம்பி, கொடைக்கானலில் தங்கியிருந்தபோது நடந்ததை சாவித்திரியின் ஆசைக்காக ராமேஸ்வரம் நான், சாவித்திரி, மகள் விஜயா மற்றும் பேமிலி டாக்டர்ஸ் ராமகிருஷ்ணா, லீலாவதி, ஜெயம்மா ஆகிய 6 அறுவரும் 22-ம் தேதி காலை ராமேஸ்வரம் கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு, தனுஷ்கோடி கடலில் குளித்து முடித்த பின்பு, “மேலும் ஒரு நாள் தனுஷ்கோடியில் தங்கிட்டு ராமேஸ்வரம் போகலாமா?” என சாவித்திரி கேட்டபோது , நான் வேண்டாம், இன்றைய பொழுதே திரும்பிவிடலாம் என பிடிவாதமாக, பிற்பகல் தனுஷ்கோடியில் இருந்து கிளம்பினோம், அன்று இரவு சீக்கிரம் தூங்கிவிட்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுபற்றி பதிவு செய்திருந்த சாவித்திரி, “அன்று இரவு காற்றின் இரைச்சலுடனும் பெரும் புயல் அடித்தது. இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை. அவரும் (ஜெமினி) விழித்துக் கொண்டார். நள்ளிரவு 3 மணிக்கு நரிகள் சேர்ந்து ஊளையிட்டன. சூறாவளி சுழன்றடித்தது. ராமேஸ்வரம் ரயில் நிலைய பயணிகள் தங்கி இருந்த பங்களா கூரைகள் பறந்தன. வெளியே ஒரே வெள்ளக்காடாக இருந்தது. ‘என்னம்மா ரோட்டில் தண்ணி ஆறு மாதிரி ஓடுது’ என என் மகள் விஜயா கேட்டாள். ‘திரும்பிச் செல்ல ரெயில் கிடைக்குமா என அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, அவரோ `ரெயிலா? பாம்பன் பாலத்தையே கடல் அடித்துப் போய்விட்டது’ என்றார்.
எங்களிடம் இருந்த 1,000 ரூபாயை புயலால் வீடு வாசல்களை இழந்தவர்களுக்கு பகிர்ந்து அளித்தோம். சிலரை ஆஸ்பத்திரியில் சேர்க்க என் கணவர் உதவினார். அன்றும் ராமேஸ்வரத்திலேயே இருந்தோம். விமானம் மூலமும் உணவுப் பொட்டலங்கள் தந்தார்கள். 26-ஆம் தேதி காலை அமைச்சர் கக்கன் வந்த அதே ரயிலில் ஏறி பாம்பனை வந்தடைந்தோம். அங்கிருந்த மோட்டார் படகில் மூலம் மண்டபம் வந்த, எங்கள் கார் ஒன்றின் மூலம் மதுரை வந்து, விமானம் மூலம் அங்கிருந்து சென்னையை வந்தடைந்தோம்” என தெரிவித்திருந்தார். அந்தமானில் உருவான புரெவி புயல் இலங்கை திரிகோணமலையைக் கடந்த நிலையில், நாளை அதிகாலை பாம்பன் - தொண்டி இடையே கரையைக் கடக்கிறது.