தேங்க் யு கொரோனா...! 'சிஎம் சாரோட ஒரே அறிவிப்பு...' '23 அரியரும் கிளியர்...' - நெகிழ்ச்சி அடையும் மாணவர்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக முதல்வர் வெளியிட்ட ஆல் பாஸ் அறிக்கையால் ஏழை மாணவர் ஒருவர் 23 அரியர்களிலும் பாஸ் ஆகி முதல்வருக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் மக்களுக்கு பல்வேறு நெருக்கடிகளை தந்திருந்தாலும், தற்போது கல்லூரி மாணவர்களுக்கு குறிப்பாக அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு மகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி கல்லூரிகள் இயங்குவது இல்லை. மேலும் கல்லூரி தேர்வுகள் நடைபெறாமல் இருந்த சூழலில் கல்லூரி மாணவர்களின் கடைசி செமஸ்டரை தவிர அனைவரும் பாஸ் என தமிழக அரசு அறிவித்தது. இதில் வருடக்கணக்காக அரியர் வைத்திருந்த மாணவர்களின் டிகிரி கேள்விக்குறியானது. இந்நிலையில் தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரியர்களை எல்லாம் பாஸ் செய்து அறிவித்துள்ளார்.
இதனால் பயன்பெற்ற திருச்சியை சேர்ந்த சஞ்சய் நேரு என்ற மாணவர் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
எடமலைப்பட்டி கிராப்பட்டி பகுதியை சேர்ந்த 23 வயதான சஞ்சய் நேரு திருச்சி தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
10-ஆம் வகுப்பில் 427 மதிப்பெண்களும், பிளஸ்-2 தேர்வில் 905 பெற்ற இவர் கல்லூரில் என்ஜினீயரிங் எடுத்துள்ளார். ஆனால் கல்லூரி பாடங்கள் எதுவும் புரியாததால், படிப்பில் ஆர்வம் குறைந்து இடைநின்று விடலாமா? எனவும் யோசித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் பெற்றோர்களின் வற்புறுத்துதலின் பெயரில் தன் கல்லூரி படிப்பை தொடர்ந்துள்ளார். மேலும் அவரின் புரியாத படிப்பு அவருக்கு 23 அரியர்களை வழங்கியுள்ளது.
இதுகுறித்து கூறும் சஞ்சய், 'முன்பெல்லாம் அரியர்களை தாங்கள் விரும்பும் நேரத்தில் எழுதிக்கொள்ளலாம். ஆனால் இப்போது முதலாம் ஆண்டு அரியர்களை எழுதி தேர்ச்சி பெற்றால் தான் 4-ம் ஆண்டுக்கு அனுப்பி வைப்போம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. அதானலேயே வேறு வழியில்லாமல் நான் 23 அரியர் பாடங்களுக்கும் கட்டணம் செலுத்தினேன்.
என்னை போன்ற மாணவர்களுக்கு அரியர் கட்டணம் செலுத்துவதும், அதையடுத்து தேர்வு எழுதிய பின்னர் மறுமதிப்பீடு கேட்க ரூ.150 செலுத்த வேண்டும். பாஸ் ஆகும் மதிப்பெண் எடுத்திருந்தால் தவறுகளை சுட்டிக்காட்டி மீண்டும் அனுப்ப ரூ.450 கட்டுவது எல்லாம் முடியாத காரியம்.
இப்போது முதல்வர் அவர்களின் அறிவிப்பால் நான் அரியர்களில் எல்லாம் பாஸ். இது எல்லையில்லா மகிழ்ச்சியை அளித்துள்ளது. முக்கியமாக கொரோனாவுக்கு மிக்க நன்றி.
என்னுடைய 12 நண்பர்களில் போனமுறை ஒருவர் மட்டுமே ஆள் பாஸ், இப்போது நாங்கள் அனைவருமே ஆல் பாஸ்' எனத் தெரிவித்துள்ளார்.