“சார் ப்ளீஸ் போகாதீங்க”.. கடைசியா ஒரு தடவை ‘அந்த’ பாட்டை பாடுறோம்.. கண்ணீர் மல்க டீச்சருக்கு பிரியாவிடை..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பணி மாறுதல் பெற்று வேறு பள்ளிக்கு செல்ல இருந்த ஆசிரியரை பிரிய மனம் இல்லாமல் மாணவ, மாணவிகள் அவரை சூழ்ந்துகொண்டு போக விடாமல் தடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே வடதொரசலூர் கிராமம் உள்ளது. இங்குள்ள அரசு உயர்நிலை பள்ளியில் ஆனந்த கண்ணன் என்பவர் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தொழில் நுட்பத்துடன் இணைந்த கல்வி முறையின் மூலம் மாணவர்களுக்கு எளிமையாக ஆங்கிலம் கற்றுக் கொடுத்துள்ளார். மேலும் கிராமப்புற பகுதிகளில் இருந்து வரும் மாணவ, மாணவிகளும் எளிமையாக ஆங்கிலம் பேச முடியும் என்ற நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளார். தொடர்ந்து அவர்களை சரளமாக ஆங்கிலத்தில் பேச வைத்தும் பயிற்சி கொடுத்துள்ளார்.
பணி மாறுதல்
இந்த நிலையில் நேற்று அவருக்கு வேறு பள்ளிக்கு பணி மாறுதல் ஆணை வந்துள்ளது. அதனால் அந்த பள்ளிக்கு ஆனந்த கண்ணன் செல்ல தயாராக இருந்துள்ளார். இதை அறிந்த மாணவ, மாணவர்கள் வேகமாக வந்து ஆசிரியர் ஆனந்த் கண்ணனை செல்ல விடாமல் சூழ்ந்து கொண்டர். அப்போது, சார் ப்ளீஸ் இங்கிருந்து போகாதீங்க என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர்.
ஆசிரியருக்கு பிரியாவிடை
உடனே வந்த சக ஆசிரியர்கள், உங்களைப் போன்று அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களும் பயனடைய வேண்டும் என்று அறிவுரை கூறியுள்ளனர். இதனை ஏற்றுக் கொண்ட மாணவர்கள் கடைசியாக ஆசிரியர் ஆனந்த கண்ணன், ஆங்கிலத்தை எளிதாக படிக்கும் வகையில் கற்றுக்கொடுத்த ஆங்கிலப் பாடலை கண்ணீர் மல்க பாடி பிரியாவிடை கொடுத்தனர்.
நல்லாசிரியர் விருது
இந்த சம்பவம் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. கடந்த 2017-ம் ஆண்டு முதல் அப்பள்ளியில் ஆனந்த கண்ணன் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தமிழக அரசின் மாநில அளவில் கனவு ஆசிரியர் விருதும், டாக்டர் ராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருதும் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
