3 கோடி ரூபாய் கல்வி உதவி... ஈரோடு மாணவிக்கு அமெரிக்க பல்கலை., கொடுத்த அங்கீகாரம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றில் இளநிலை பட்டப்படிப்பு படிக்க ஈரோடு மாணவி ஒருவருக்கு 3 கோடி ரூபாய் கல்வி உதவித்தொகை ஆக வழங்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள புஞ்சை பாலதொழுவு ஊராட்சி காசிபாளையத்தை சேர்ந்தவர் சாமிநாதன். இவருடைய மனைவி சுகன்யா. இவர்களுக்கு ஸ்வேதா (வயது 17) என்ற மகளும், அச்சுதன் (வயது 12) என்ற மகனும் உள்ளனர். தனியார் பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பை முடித்து உள்ளார். 14 வயது முதல் சர்வதேச பயிற்சி மையம் ஒன்றின் கீழ் தலைமைத்துவ மேம்பாடு மற்றும் தொழில் மேம்பாடு ஆகிய பயிற்சிகளைப் பெற்று வந்துள்ளார் ஸ்வேதா.
இந்த சர்வதேச நிறுவனம் கிராமப்புறம் மற்றும் சிறு நகரங்களில் உள்ள மாணவர்களுக்கு உலகளாவிய கல்வி வாய்ப்புகள் குறித்து கற்பித்து அவர்களுக்கான இணைப்புத் தளம் ஆக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பயிற்சி பெற்ற ஸ்வேதா தற்போது அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு படிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மேலும், சிகாகோ பல்கலைக்கழகத்தின் சார்பாகவே சுமார் 3 கோடி ரூபாய்க்கு கல்வி உதவித் தொகையையும் ஸ்வேதா பெற்றுள்ளார். சர்வதேச பயிற்சி நிறுவனத்தில் 2 ஆண்டுகளாக பயிற்சி பெற்றுள்ளார் ஸ்வேதா. மேலும், இது போல் வெளிநாடுகளில் படிக்க விரும்பும் மாணவர்களுக்காக ஆன்லைனில் சர்வதேச தகுதித் தேர்வும் நடந்துள்ளது.
இந்தத் தேர்வில் சிறப்பாக செயல்பட்டு முதன்மையான இடத்தில் தேர்வு பெற்றுள்ளார் ஸ்வேதா. இதன் மூலம் தான் இவருக்கு 3 கோடி ரூபாய் கல்வி உதவித் தொகை சிகாகோ பல்கலைக்கழகத்தின் சார்பில் கிடைத்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்த விவசாயியின் மகள் கோடிக்கணக்கில் உதவித்தொகை பெற்று அமெரிக்க செல்வதற்கு அந்த கிராமத்தினர் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.