சட்டமன்ற இடைத்தேர்தல்: 4 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் தேதியினை அறிவித்த தேர்தல் ஆணையம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Apr 09, 2019 04:56 PM
ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவை அல்லது நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகள் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டு முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிகள், தேர்தல் அறிக்கை, தொகுதி பங்கீடு மற்றும் வாக்குறுதிகள், பிரச்சாரங்கள் என களைகட்டி போய்க்கொண்டிருக்கும் வேளையில் இடைத் தேர்தலுக்கான தகவலையும் தேர்தல் ஆணையம் தற்போது உறுதிப்படுத்தியுள்ளது.
முன்னதாக மக்களவைத் தேர்தலின் கூட்டணி பேச்சுவார்த்தைகளின்போதே பல கட்சியினர், அதே கூட்டணி நிலைப்பாடுகள்தான் இடைத் தேர்தலுக்கும் என்று சூசகமாக தெரிவித்தனர். சிலர் இடைத் தேர்தலுக்கான வேட்பாளர்களையும் அறிவித்து ஒரேடியாக பிரச்சாரம் செய்கின்றனர்.
இந்த நிலையில் 4 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத் தேர்தல் தேதியினை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற மே-19 நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வேட்புமனுத்தாக்கலுக்கான காலம் ஏப்ரல் 22-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 29-ல் முடிகிறது. மனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் 30 அன்றும், வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான இறுதி நாளாக மே 2-ஆம் தேதியும், மே-19 அன்று தேர்தலும், மே 23-ஆம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கையும் நிகழவுள்ளன.
