'கல்யாணம் காட்சி பண்ணலாம்'... 'கும்பலா சுத்தலாம்'...'கொரோனாவுக்கு முடிவுரை எழுதியாச்சு'... 'எப்படி சாதித்தார் ஜெசிந்தா'?... அசந்து போன உலகநாடுகள்!
முகப்பு > செய்திகள் > உலகம்இன்று உலகநாடுகள், ஏன் வல்லரசு நாடுகளே அசந்து பார்க்கும் ஒரே நபர் நிச்சயமாக இவராகத் தான் இருக்க முடியும். அவர் தான் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன். அவர் அப்படி என்ன தான் செய்தார் என்று கேட்டால், ஒரே ஒரு பதில் தான், ''கொரோனாவுக்கு நியூசிலாந்தில் முடிவுரை எழுதிவிட்டார்''. அவர் எப்படி சாதித்தார் என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
உலகையே ஆட்டம் காண வைத்த கொரோனா நியூசிலாந்து நாட்டையும் விட்டு வைக்கவில்லை. கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் அங்கு கொரோனா நுழைந்த நிலையில், அப்போதே ஜெசிந்தா உஷாரானார். இதையடுத்து மார்ச் 25ம் தேதி அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பெரும்பாலான வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன.
பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன. மக்கள் வீடுகளுக்குள் இருக்குமாறு அரசு அறிவுறுத்தியது. நான்கு நிலை எச்சரிக்கை அமைப்பை அந்த நாடு கொண்டு வந்தது. அதன்படி தொடர்ச்சியான அதிரடி நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டன. நாடு முழுவதும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டது. அரசின் அனைத்து துறைகளும் மின்னல் வேகத்தில் இயங்கியது. மக்களும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.
இதையடுத்து 5 வாரங்களுக்குப் பின்னர் மூன்றாம் நிலை எச்சரிக்கை அமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டது. உணவு விடுதிகள், ஓட்டல்கள் திறக்கப்பட்டன.அத்தியாவசியமற்ற சில வணிகங்கள் மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் வைரஸின் தாக்கம் தொடர்ந்து குறைந்து கொண்டே சென்றது. இருப்பினும் கண்காணிப்பு என்பது தீவிரமாக இருந்தது. இதனால் கடந்த மாத மத்தியில் 2-ம் நிலை எச்சரிக்கை அமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டது.
அதன் பிறகும் வைரஸின் தாக்கம் குறைந்து கொண்டே சென்றதால், லெவல் ஒன் என்ற இயல்பு நிலைக்கு ஜூன் 22-ந் தேதி, நாடு திரும்பலாம் என்ற முடிவுக்கு அரசு வந்தது. ஆனால் முன்கூட்டியே இன்று (செவ்வாய்க்கிழமை) நாடு இயல்புநிலைக்குத் திரும்புகிறது. இதற்கு முக்கிய காரணம், கடந்த 17 நாட்களாகப் புதிதாக ஒருவருக்கு கூட அங்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை.
இன்று முதல் அங்குக் கடைப்பிடிக்கப்பட அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படுகிறது. மக்கள் சுதந்திரமாக தங்களின் பழைய நிலைக்குத் திரும்ப இருக்கிறார்கள். இனி அங்கு அங்குத் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டியது இல்லை. திருமணம், விழாக்கள், இறுதிச்சடங்குகள் எனப் பொதுமக்கள் கூடுவதற்குத் தடை ஏதும் கிடையாது. போது போக்குவரத்துகள் இயங்கும். ஆனால் நியூசிலாந்துக்கு வெளிநாட்டினர் யார் வந்தாலும் 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற விதி மட்டும் தொடரும்.
அதே நேரத்தில் நாட்டின் எல்லைகள் அனைத்தும் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். இதற்கிடையே இந்த மகிழ்ச்சியான செய்தி குறித்து பிரதமர் ஜெசிந்த ஆர்டெர்ன் பேசும்போது, '' நமது நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று இல்லை யாருக்கும் இல்லை என்று என்னிடம் சொன்னபோது, மகிழ்ச்சியில் சற்று நடனம் ஆடினேன். நாம் இப்போது பாதுகாப்பாக இருக்கிறோம். அதே நேரத்தில் கடந்த காலத்திற்குத் திரும்புவது என்பது எளிதான காரியம் ஒன்றும் அல்ல.
நமது சுகாதார அமைப்பில் கொண்டிருந்த உறுதியும், கவனமும் நமது பொருளாதார மறுகட்டமைப்பில் இருக்க வேண்டும். நிச்சயமாக இது ஒரு ஒரு மைல்கல்'' பூரிப்புடன் கூறியுள்ளார். கொரோனாவை ஜெயித்து காட்டிய ஜெசிந்தா ஆர்டெர்னை பல நாட்டுத் தலைவர்களும் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.
நியூசிலாந்தில் 1,154 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், அரசின் கடும் நடவடிக்கையின் காரணமாக அது மற்றவர்களுக்குப் பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது. 22 பேர் பலியான நிலையில், தற்போது கொரோனாவுக்கு முடிவுரை எழுதி உலக நாடுகள் அனைத்திற்கும் முன்மாதிரியாக வீரநடை போடத் தயாராகியுள்ளது. இந்த நேரத்தில் நாமும் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன்க்கு ஒரு சலுயூட் போடலாம்.