‘அப்பாவை விட அதிகம்’!.. உதயநிதியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..? வேட்புமனுவில் வெளியான தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் சொத்த மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல், கடந்த மார்ச் 12-ம் தேதி தொடங்கிய நிலையில், மார்ச் 19-ம் தேதி வரை வேட்பு மனுத்தாக்கல் நடைபெறுகிறது. இந்த நிலையில், இன்று (15.03.2021) சுபமுகூர்த்த நாள் என்பதால் அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி, அமமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் தங்களது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர்.
அதேபோல் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை கழக நிர்வாகிகள் - தொண்டர்கள் - கூட்டணிக்கட்சிகளைச் சார்ந்த நிர்வாகிகளுடன் ஊர்வலமாக சென்று மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தாக்கல் செய்தேன். pic.twitter.com/NZh4N3RItw
— Udhay (@Udhaystalin) March 15, 2021
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், ‘எம்எல்ஏ என்பது நியமனப் பதவி கிடையாது. என்னை வாரிசு அரசியல் என்று மக்கள் நினைத்தால் நிராகரிக்கட்டும். திமுகவின் சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்பேன். கலைஞர், அன்பழகன், மறைந்த எம்எல்ஏ அன்பழகன் ஆகியோர் எம்எல்ஏ-வாக இருந்த தொகுதி இது. திமுகவை சேர்ந்தவர்கள் எம்எல்ஏ-வாக இருந்ததாலே அரசால் புறக்கணிக்கப்பட்டுள்ளது’ என பேசினார்.
இந்த நிலையில் வேட்பு மனுவில் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ள சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, உதயநிதி ஸ்டாலினின் அசையும் சொத்து மதிப்பு ரூ. 21.13 கோடியும், அசையா சொத்து மதிப்பு ரூ. 6.54 கோடியும் உள்ளது. மேலும் ரூ. 1.77 கோடியில் ரேஞ்ச் ரோவர் கார், தயாரிப்பு நிறுவனத்தில் ரூ. 7.36 கோடி முதலீடு செய்துள்ளார்.
மேலும் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா பெயரில் ரூ. 1.15 கோடி மதிப்புக்கு அசையும் சொத்துக்கள் உள்ளன. உதயநிதி ஸ்டாலின் மீது சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் 22 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை விட, உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு அதிகம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதில் மு.க.ஸ்டாலினின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ. 6.11 கோடி என குறிப்பிட்டுள்ளது. மேலும் அவரது மனைவி துர்கா ஸ்டாலினின் பெயரில் ரூ. 53 லட்சம் மதிப்பில் அசையும் சொத்துக்கள் உள்ளன என மு.க.ஸ்டாலினின் வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.