ராகிங் புகார்கள் குறித்து பேசிய டிஜிபி சைலேந்திர பாபு .. காவல்துறை அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ராகிங் குறித்த புகார்களின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திர பாபு கடிதம் எழுதியுள்ளார்.
Also Read | இணையத்தில் வைரலாகும் உலகின் மிக நீளமான மூக்குடைய நபர்.. யாரு சாமி இவரு?.. வெளியான சுவாரஸ்ய தகவல்..!
அண்மையில் வேலூரில் இயங்கிவரும் ஒரு கல்லூரியில் மாணவர்கள் ராகிங் செய்யப்பட்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. முதலாம் ஆண்டு மாணவர்களை ராகிங் செய்ததாக சொல்லப்படும் 7 மாணவர்களை கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்ததோடு, அவர்கள் மீது புகாரும் அளித்திருந்தது. இதனையடுத்து, தமிழ்நாடு ராகிங் தடுப்பு சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், ராகிங் குறித்த புகார்கள் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு. அதில், ராகிங் புகார் குறித்து நடவடிக்கை எடுக்க கல்வி நிறுவனங்கள் தாமதம் செய்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் நேரடியாக ராகிங் குறித்து காவல்துறையில் புகார் அளிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாணவர்களிடையே நம்பிக்கையை வளர்க்கும் விதத்தில் மனநல ஆலோசகர்கள் மூலமாக நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில், இறுதியாண்டு மற்றும் முதலாண்டு படிக்கும் மாணவர்களிடையே நல்ல சூழல் நிலவுவதை கல்லூரி நிர்வாகம் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ராகிங் எதிர்ப்புப்படை மற்றும் ராகிங் தடுப்பு குழு ஒவ்வொரு கல்லூரியிலும் இருக்க வேண்டும் எனவும், இது தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தபட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, கல்வி நிறுவனங்களில் ராகிங் தொடர்பான கண்காணிப்பு பிரிவு இருக்க வேண்டும். விடுதி கண்காணிப்பாளர் எல்லா நேரங்களிலும் அணுகக் கூடிய நிலையில் இருக்க வேண்டும் மற்றும் கல்வி நிறுவன பொறுப்பாளர்கள், ஆசிரிய உறுப்பினர்கள், ராகிங் எதிர்ப்புக் குழு உறுப்பினர்கள், மாவட்ட மற்றும் உட்கோட்ட அதிகாரிகள் மற்றும் மாநில அதிகாரிகளின் தொலைபேசி எண்களும் வெளிப்படையாக தெரிவிக்கப்பட வேண்டும் எனவும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.