ஆன்லைனில் அதிகரிக்கும் 'பாஸ் ஸ்கேம்' நூதன மோசடி.. தமிழக டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்ட வார்னிங் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் பாஸ் ஸ்கேம் என்னும் நூதன மோசடியில் சிலர் ஈடுபட்டு வருவதாகவும் மக்கள் கவனத்துடன் இருக்கும்படியும் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு எச்சரித்திருக்கிறார்.

இணையத்தின் வளர்ச்சி மனித குலத்திற்கு பல நன்மைகளை கொடுத்திருக்கிறது. தகவல் தொடர்பு துறை இன்றைய நவீன உலகில் மிகப்பெரும் உயரத்தை அடைந்திருக்கின்றன. உலகின் ஒரு மூலையில் நடைபெறும் நிகழ்வுகளை நாம் அடுத்த வினாடியே தெரிந்துகொள்ள முடிவதற்கு நமக்கு இணையம் உதவுகிறது. ஆனால், அதையே மோசடி வழிக்கும் சிலர் பயன்படுத்துகிறார்கள். தகவல் திருட்டு, ஆன்லைன் மூலம் பணம் மோசடி ஆகியவற்றில் ஈடுபடும் நபர்கள் சமீப காலங்களில் அதிகரித்திருக்கின்றனர். இவர்களை தடுக்க காவல்துறையினரும் அவ்வப்போது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
எச்சரிக்கை
அந்த வகையில் தற்போது பாஸ் ஸ்கேம் எனப்படும் நூதன மோசடியில் சிலர் ஈடுபட்டு வருவதாகவும் ஆகவே மக்கள் உஷாராக இருக்க வேண்டும் எனவும் தமிழக டிஜிபி எச்சரித்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோவில்,"ஆன்லைனில் புதிய வகை மோசடி வந்துள்ளது. நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில், பெரிய அதிகாரி, கலெக்டர், டிஜிபி போன்றவர்கள் செல்போனில் பேசுவது போன்று பேசி, நான் ஆலோசனை கூட்டத்தில் இருக்கிறேன். பரிசு கூப்பன் தேவைப்படுகிறது. ஒரு கூப்பன் விலை ரூ.10 ஆயிரம். 10 கூப்பன் வாங்கி அனுப்புங்கள். நான் பிறகு பணம் கொடுத்து விடுகிறேன் என்பார்கள். எனக்கு அவ்வாறு கூப்பன் வாங்க தெரியாது என்று நீங்கள் சொன்னால் உங்களுக்கு அவர்களே லிங்க் ஒன்றை அனுப்பி வைப்பார்கள். ஒரு லட்ச ரூபாய்க்கு 10 கூப்பன்கள் வாங்கி அனுப்பினால் அது போதாது மேலும் கூப்பன்கள் வேண்டும் என உங்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புவார்கள். இப்படி 50 கூப்பன்கள் வாங்கி அனுப்பினால் 5 லட்சம் ரூபாய் ஆகும்",
"ஆனால் அதன்பிறகு தான் நம்முடைய அதிகாரி இப்படி பணம் கேட்க மாட்டார் என உங்களுக்கு தோன்றும். அப்படியான சூழ்நிலையில், உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறையின் 100, 112 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். காவலன் உதவி செயலியை உங்களுடைய செல்போனில் பதவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள். இதில் ஆன்லைன் மோசடி என்பதை தொட்டாலே, 1930 என்ற எண்ணுக்கு அழைப்பு போய் விடும். இதன் மூலம் உங்களுடைய பணத்தை காப்பாற்றி கொள்ளலாம். இதற்கு பாஸ் ஸ்கேம் என்று பெயர். உங்களுக்கு வரும் அழைப்பிலும் உங்களுடைய அதிகாரியின் மொபைல் எண், புகைப்படம் ஆகியவையும் இருக்கும். ஆனால் அது அவர்கள் கிடையாது. இது மோசடி நபர்களின் வேலை என அறிந்த உடனேயே காவல்துறையினரை தொடர்பு கொள்ளவும். எனவே இது போன்ற மோசடியில் அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் விழுந்து உங்கள் பணத்தை இழந்துவிடாதீர்கள்" என எச்சரித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஆன்லைனில் நடக்கும் பரிசு கூப்பன் மோசடி சம்பந்தமாக காவல்துறை தலைமை இயக்குனர்/ படைத்தலைவர் முனைவர் செ. சைலேந்திரபாபு, IPS., அவர்களின் விழிப்புணர்வு காணொளி.#OnlinePrizeCoupon #AwarenessVideo#CyberAwareness #BeAlert#DGPSylendrababuIPS #TnPolicehttps://t.co/GBXd2smqyP pic.twitter.com/jrulfUdMCP
— Tamil Nadu Police (@tnpoliceoffl) August 18, 2022

மற்ற செய்திகள்
