'தொடர்ந்து சொல்லுவோம், திரும்ப திரும்ப சொல்லுவோம்'... 'பாஜக உறுப்பினர் கேட்ட கேள்வி'... முதல்வர் ஸ்டாலின் அதிரடி பதில்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஒன்றிய அரசு என்ற சொல்லைக் கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையிலேயே பயன்படுத்துகிறோம் எனச் சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் இரண்டாவது நாள் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது, அதில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறுகிறது. இந்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், தமிழக அரசு பயன்படுத்திவரும் ஒன்றிய அரசு என்ற வார்த்தையைக் குறித்து கேள்வி எழுப்பினார்.
அவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், “ஒன்றியம் என்பது தவறான சொல் அல்ல; ஒன்றிய அரசு என்ற சொல்லைக் கூட்டாட்சி தத்துவ அடிப்படையில் பயன்படுத்துகிறோம். மாநிலங்கள் ஒன்று சேர்ந்து இருப்பதே ஒன்றியம் என்பதற்குப் பொருள். எனவே ஒன்றிய அரசு எனக் கூறுவதைப் பார்த்து யாரும் மிரளத் தேவையில்லை, அதை சமூக குற்றமாகப் பார்க்கக்கூடாது”என்று தெரிவித்தார்.
மேலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் வரியிலேயே , இந்தியா, அதாவது பாரதம் மாநிலங்களின் ஒன்றியம் என்ற வரிதான் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் விளக்கமளித்தார். பெரியார், அண்ணா ஆகியோர் கூறியதைத்தான் நாங்களும் சொல்கிறோம். இதற்கு முன்பு தலைவர் கருணாநிதி வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும், ஒன்றிய அரசு என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது.
கூட்டாட்சி தத்துவத்தின் கீழ்தான் ஒன்றியம் என்ற வார்த்தை இடம்பெறுகிறது. எனவே தொடர்ந்து அதை நாங்கள் பயன்படுத்துவோம். எனவே ஒன்றிய அரசு என்பதைச் சொல்லுவோம், அதனைத் திரும்பத் திரும்ப சொல்லுவோம் என அதிரடியாகப் பதிலளித்தார். இதைத்தொடர்ந்து பேசிய நயினார் நாகேந்திரன், ‘இந்தியாவுக்குள் தான் பல்வேறு மாநிலங்கள் உள்ளன. பல்வேறு மாநிலங்கள் அடங்கியது இந்தியா அல்ல. எனவே ஒன்றியம் என்ற வார்த்தையை எப்படிப் பயன்படுத்த முடியும்?’’ என்று மீண்டும் கூறினார்.
இதற்கு அமைச்சர் பொன்முடி பதில் அளித்தார். அவர் கூறும்போது, ‘‘எல்லா மாநிலங்களும் இணைந்த ஒன்றியம் தான் இந்தியா’’ என்று கூறினார். அப்போது குறுக்கிட்டுப் பேசிய சபாநாயகர் அப்பாவு, ‘‘உறுப்பினர் நயினார் நாகேந்திரன் இந்த விவகாரத்தை விட்டுவிட்டு கவர்னர் உரையைப் பற்றி மட்டும் பேச வேண்டும். இதுபற்றி வேறொரு நாளில் விவாதிக்கலாம்’’ என்று கூறினார்.