'பரபரப்பை ஏற்படுத்திய எஸ்.பி.ஐ ஏ.டி.எம் கொள்ளை'... 'சென்னை முதல் ஹரியானா வரை'... அதிரடி காட்டிய போலீசார்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்எஸ்.பி.ஐ. வங்கிகளில் போலி முகவரிகளைக் கொடுத்து கணக்கைத் தொடங்கி உள்ள வடமாநில கொள்ளையர்கள் துணிகர கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். மையங்களில் பணம் செலுத்தும் எந்திரங்களிலிருந்து கொள்ளையர்கள் நூதன முறையில் பணத்தை எடுத்து இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை கீழ்ப்பாக்கம் அழகப்பா ரோட்டில் உள்ள எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். மையத்தில் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் கொள்ளை போனது.
தி.நகர் வடக்கு உஸ்மான் ரோட்டில் உள்ள எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். மையத்தில் ரூ.70 ஆயிரம் பணம் திருடப்பட்டுள்ளது. கடந்த 17-ந்தேதி இந்த வங்கி ஏ.டி.எம். மையத்துக்குள் புகுந்த 2 பேர் பணம் செலுத்தும் எந்திரத்திலிருந்து இந்த பணத்தை எடுத்துள்ளனர். சென்னையில் மட்டும் இதுபோன்று 14 எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். மையங்களில் கொள்ளையர்கள் பணத்தைத் திருடி இருப்பது தெரியவந்தது.
மேலும் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இதே போன்று பணம் திருடப்பட்டு இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது. எஸ்.பி.ஐ. வங்கிகளில் போலி முகவரிகளைக் கொடுத்து கணக்கைத் தொடங்கி உள்ள வடமாநில கொள்ளையர்கள் இந்த துணிகர கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இப்படித் திருடப்பட்ட பணம் அனைத்தும் வங்கியின் பணமாகும்.
பணம் செலுத்தும் எந்திரத்தில் ஏ.டி.எம். கார்டை செலுத்தி அதிலிருந்து பணம் எடுத்ததும் சில வினாடிகள் பணம் வெளியில் வரும் பகுதிகளில் கைகளால் பிடித்து வைத்திருப்பதன் மூலம் வங்கிக் கணக்கிலிருந்து எடுக்கப்படும் பணம் வெளியில் செல்லாதது போன்று காட்டும் தொழில்நுட்பம் ஏ.டி.எம்.மில் உள்ளது.
இதனையே கொள்ளையர்கள் கண்டுபிடித்து நூதன கொள்ளையில் தொடர்ச்சியாக ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து நேற்று எஸ்.பி.ஐ. வங்கியின் சென்னை மண்டல தலைமை பொது மேலாளர் ராதாகிருஷ்ணன் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலை சந்தித்து புகார் அளித்தார். அப்போது பணம் செலுத்தும் எந்திரத்தில் உள்ள தொழில் நுட்ப பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட்டது.
உடனடியாக பணம் செலுத்தும் மையத்தில் பணம் எடுப்பதற்குத் தடையும் விதிக்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தச் சென்னை மத்திய குற்றப்பிரிவு, வங்கி மோசடி தடுப்பு பிரிவு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. உடனடியாக அவர்கள் கொள்ளையர்கள் பற்றித் துப்பு துலக்கினர். அப்போது கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
இந்த நிலையில் வங்கி ஏ.டி.எம். கொள்ளையர்களைப் பிடிக்கத் தனிப்படையினர் நேற்று இரவே அரியானா புறப்பட்டுச் சென்றனர். இன்று காலை அரியானாவில் முக்கிய கொள்ளையர்கள் 2 பேர் பிடிபட்டனர். மேலும் 2 பேர் டெல்லியில் சிக்கியதாகக் கூறப்படுகிறது. பிடிபட்ட அனைவரையும் அரியானாவில் ஒரே இடத்தில் வைத்து சென்னை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் மேலும் பலருக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.