'ச்சே, என்னா மனுஷன் சார்'... 'பாட்டியை போட்டோ எடுத்த கையேடு போட்டோகிராபர் செய்த செயல்'... நெகிழவைக்கும் சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாகர்கோவிலைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரான ஜாக்சன் ஹெர்பி எடுத்த இந்த புகைப்படம் இணையத்தைக் கலக்கி வருகிறது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பலரும் வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில் கொரோனா நிவாரணமாக 4000 ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி முதல் தவணையாக 2000 ரூபாய் ஏற்கனவே வழங்கப்பட்டது. தற்போது இரண்டாம் தவணையாக ரூ.2 ஆயிரம் ரூபாய் மற்றும் 14 மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டம் நேற்று தொடங்கியது.
அதன்படி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த வேலம்மாள் என்கிற ஏழை மூதாட்டி, ரூ.2 ஆயிரம் பணமும் மளிகைப் பொருட்களும் வாங்கிய மகிழ்ச்சி பிரவாகத்தில் சிரித்த சிரிப்பு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள், நெட்டிசன்கள் உள்பட ஏராளமானோர் அந்தப் புகைப்படத்தைச் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்த நிலையில், ‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதாக நெகிழ்ச்சியோடு பதிவிட்டனர்.
இதற்கிடையே இந்த வைரல் புகைப்படத்தை எடுத்தவர் நாகர்கோவிலைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரான ஜாக்சன் ஹெர்பி. நாகர்கோவில் மாநகராட்சி புகைப்படக்காரரான ஜாக்சன் ஹெர்பி, தனது துணிச்சலான செயல்பாடுகளால் கவனிக்கப்படுவர். கன்னியாகுமரி மாவட்டத்தை ஒக்கி புயல் தாக்கியபோது இவர் எடுத்த புகைப்படங்கள் பெரிய அளவில் பேசப்பட்டன.
பிரதமர் நரேந்திர மோடி குமரி வந்திருந்தபோது பாதிப்பின் தீவிரத்தை விளக்க வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களில் இவர் எடுத்த படங்களும் அதிக அளவில் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் வேலம்மாள் பாட்டியின் புகைப்படத்தை எடுத்த ஜாக்சன் அந்த பாட்டியிடம், "பாட்டி இந்த பணத்தை என்ன செய்யப் போறீங்க" என்று கேட்டிருக்கிறார். அதற்கு அந்த பாட்டி இந்த பணத்தை வைத்து நல்லதாகச் சேலையும் தேவையான பொருட்களும் வாங்கப் போகிறேன்" என்று மகிழ்ச்சியாகக் கூறியுள்ளார்.
இது ஒருபுறம் இருக்கத் தமிழ்நாடு அரசால் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்ட 5,000 ரூபாய் நிவாரணத் தொகை ஜாக்சனுக்குக் கிடைத்திருக்கிறது. அதிலிருந்து 2,000 ரூபாயை வேலம்மாள் பாட்டியின் வீட்டிற்குச் சென்று கொடுத்து உதவியுள்ளார் ஜாக்சன். இதுமட்டுமல்லாமல் ஜாக்சன் எடுத்த பல புகைப்படங்கள் அவர்களின் வாழ்க்கையில் பல திருப்புமுனைகளை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக சில தினங்களுக்கு முன்பு கொரோனா நோய்த் தொற்றால் முழு ஊரடங்கு காலத்தில் தனது வறுமையின் காரணமாக மூன்று பெண் குழந்தைகளின் தாய் ஒருவர் சைக்கிளில் டீ வியாபாரம் செய்வது குறித்து புகைப்படத்தை பேஸ்புக்கில் ஜாக்சன் பதிவிட்டிருந்தார். இந்த பதிவைப் பார்த்த சென்னை பத்திரிகையாளர் மன்ற செயலாளர் பாரதி தமிழன் 5000 ரூபாயை ஜாக்சனுக்கு அனுப்பி வைத்து அந்த பெண்ணிடம் இந்த பணத்தை உடனடியாக கொண்டு சேர்க்குமாறு கூறியுள்ளார்.
மேலும் அந்த தாய்க்குக் குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் இரண்டு மாதத்திற்குத் தேவையான மளிகைப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளார். கொரோனா பெருந்தொற்று இதுபோன்ற பல நல்ல மனிதர்களை இந்த சமூகத்திற்கு அடையாளம் காட்டியுள்ளது என்பது நிதர்சனமான உண்மை.

மற்ற செய்திகள்
