'ஒரு பெண்ணை காதலில் விழ வைத்து... அவரது தோழிகள் அடுத்த டார்கெட்'!.. படிக்கும் பெண்கள் முதல் பணிபுரியும் பெண்கள் வரை... சென்னை காமுகனின் பதறவைக்கும் பின்னணி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாகர்கோயில் காசி போன்று, சென்னையில் இளைஞர் ஒருவர் கல்லூரி மாணவிகள், திருமணமான பெண்கள் என பலரையும் காதல் வலையில் வீழ்த்தி மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரின் தந்தை தனது மகளின் மொபைல் எண்ணிற்கு ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பும் நபர், மகளின் தோழிகளின் மொபைல் நம்பரை கேட்டு தொடர்ச்சியாக செல்போனில் தொந்தரவு செய்து வருவதாகவும், இல்லையென்றால் மார்பிங் செய்யப்பட்ட தனது மகளின் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு விடுவதாக கூறி மிரட்டல் விடுப்பதாகவும் அடையாறு சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்தார்.
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கல்லூரி மாணவிக்கு ஆபாச மிரட்டல் விடுத்த செல்போன் எண்ணை ஆய்வு செய்து தண்டையார்பேட்டை முத்தமிழ் நகரைச் சேர்ந்த 25 வயதான அருண் கிறிஸ்டோபரை கண்டுபிடித்து கைது செய்தனர்.
ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்து தற்காலிகமாக மின்வாரிய துறையில் அவன் பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.
சமூக வலைதளம் மூலம் அறிமுகமான அந்த கல்லூரி மாணவியை காதலிப்பதாக கூறி, அவரது அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பெற்று மிரட்டி வந்த கிறிஸ்டோபர், அவரது தோழிகளையும் தனக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டும் எனக் கூறி அவர்களின் மொபைல் எண்களையும் வலுக்கட்டாயமாக கல்லூரி மாணவியின் மொபைலிலிருந்து எடுத்துள்ளான்.
மேலும், கல்லூரி மாணவியின் இன்ஸ்டாகிராம் ஐடி மற்றும் பாஸ்வேர்டை வாங்கிக்கொண்டு அதிலிருந்து அவரின் தோழிகளுடன் நட்பாக பழகி ஆபாசமாக குறுஞ்செய்திகளையும் ஆபாசமாக புகைப்படங்களையும் அனுப்பி வந்துள்ளான்.
இதனால் சில தோழிகள் அந்த கல்லூரி மாணவியின் தந்தையிடம் முறையிட்டதால், தனது மகளிடம் இது பற்றி அவர் கேட்டுள்ளார். அதற்கு, யாரென்று தெரியாத ஒரு நபர் தனது இன்ஸ்டாகிராம் ஐ.டியை ஹேக் செய்துவிட்டதாகவும், மேலும் தனது மொபைல் நம்பருக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அவர் அனுப்பி வைப்பதாகவும் தனது தந்தையிடம் கூறியுள்ளார். அதன் பிறகே அந்த கல்லூரி மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தது தெரியவந்தது.
அருண் கிரிஸ்டோபரின் மொபைல் போன்களில் கல்லூரி மாணவிகள் உள்பட பல பெண்களின் நூற்றுக்கணக்கான ஆபாச புகைப்படங்களும் ஆபாச வீடியோக்களும், ஆபாச உரையாடல்கள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். சமூக வலைதளங்களில் பல போலியான பெயர்களில், போலியான புகை படங்களை முகப்பு படங்களாக வைத்துக் கொண்டு அதன் மூலமாக பெண்களுக்கு கிறிஸ்டோபர் காதல் வலையை வீசியுள்ளான்.
இவன்பேச்சை நம்பி காதல் வலையில் விழும் பெண்களின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து வைத்துக் கொண்டு அவர்களை மிரட்டி அவர்களின் மூலமாக அவர்களின் தோழிகளின் மொபைல் எண்களை பெற்று பாலியல் தொந்தரவு கொடுப்பதை வழக்கமாக கொண்டு வந்துள்ளான்.
இன்னும் இது போல எத்தனை பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளான், காதல் போர்வையில் இவனால் ஏமாற்றட்டபட்டவர்கள் எத்தனை பேர் என்றும், இதனை பயன்படுத்த பெண்களிடம் பணம் பறித்துள்ளானா என்றும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமூகவலைதளங்களில் அறிமுகமாகும் நபர்களை நம்பி, பெண்கள் வரம்பு மீறி பழகினால் என்ன மாதிரியான விபரீதம் ஏற்படும் என்பதற்கு உதாரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.