‘ரகசிய தகவல்’!.. பொம்மைக்குள் ஒளித்து வெளிநாட்டுக்கு கடத்த முயற்சி.. சென்னை தனியார் பார்சல் கம்பெனியில் அதிரடி சோதனை..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் இருந்து கத்தார் நாட்டுக்கு கடத்த இருந்த போதைப்பொருட்களை மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னை கிண்டி அடுத்த ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள தனியார் பார்சல் நிறுவனம் மூலம் வெளிநாட்டுக்கு போதைப்பொருள் கடத்தப்பட உள்ளதாக மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. சென்னை மண்டல இயக்குநர் அமித் கேவாட் உத்தரவின் பேரில் தனிப்படையினர், இதுதொடர்பாக சென்னை முழுவதும் தீவிரமாக கண்காணித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் உள்ள அராமெக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் பார்சல் நிறுவனத்தில் மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அந்த நிறுவனத்தில் இருந்த அட்டைப் பெட்டிகளை திறந்து சோதனையிட்டனர். அதில் ஒரு அட்டைப்பெட்டிக்குள் நிறைய பொம்மைகள் அடுக்கப்பட்டிருந்தன. அவற்றை பிரித்துப் பார்த்தபோது உள்ளே ‘சாரஸ்’ என்ற உலர்ந்த கஞ்சா போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சாரஸ் என்பது கஞ்சாவில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ஒருவகை போதைப்பொருள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் அவை மேற்கு வங்காளத்தில் இருந்து கத்தார் நாட்டுக்கு பொம்மைகள் என்ற பெயரில் அனுப்பப்பட இருந்தது தெரியவந்தது. மொத்தம் 4.6 கிலோ சாரஸ் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. இதனிடையே இவற்றை வெளிநாட்டுக்கு கடத்த முயன்றதாக கொல்கத்தாவைச் சேர்ந்த பிரசாத் என்பவரை மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் கொல்கத்தா விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

மற்ற செய்திகள்
