'கையில பணம் இல்லயா?.. அப்போ கூகுள் பே-ல அனுப்பு!'.. நூதன முறையில் வழிப்பறி!.. 'இது என்னங்க டா புது ட்ரெண்டா இருக்கு?
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் கத்தியைக் காட்டி மிரட்டி கூகுள் பே கணக்கில் இருந்து பணம் பறித்த 8 பேர் கொண்ட வழிப்பறி கும்பல் போலீசாரிடம் சிக்கியது.

கூகுள் பே பாஸ்வேர்டை மிரட்டி வாங்கி தங்கள் வங்கி கணக்குக்கு பணத்தை பரிமாற்றம் செய்து கொண்ட ஹைடெக் வழிப்பறி கும்பல் சிக்கியதன் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
சென்னை நெற்குன்றத்தை சேர்ந்த ராஜா என்பவர், தரமணி ரயில் நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, வழிமறித்த 8 பேர் கொண்ட கும்பல், அவரது கைக்கடிகாரத்தையும், கையில் இருந்த 3,000 ரூபாய் பணத்தையும் பறித்துக் கொண்டது.
பின்னரும் ஆசை தீராத கொள்ளையர்கள், ஒரு படி மேலே போய் ராஜாவின் செல்போனை பறித்து, கூகுள் பே செயலியின் பாஸ்வேர்டை மிரட்டி வாங்கியுள்ளனர். தொடர்ந்து, அவரது வங்கி கணக்கில் இருந்த 2,000 ரூபாய் பணத்தையும் ஒருவரின் வங்கி கணக்குக்கு பரிமாற்றம் செய்துவிட்டு, அங்கிருந்து தப்பிவிட்டனர்.
இது குறித்து ராஜா அளித்த புகாரின் பேரில் உடனடியாக விசாரணையை முன்னெடுத்த தரமணி போலீசார், கூகுள் பே மூலம் பணம் பரிமாற்றம் செய்யப்பட்ட போன் நம்பரை கைபற்றினர்.
அந்த எண் தரமணியை சேர்ந்த சத்யா என்பவரது எண் என கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், போன் நம்பர் மூலம் தாங்கள் மாட்டிக்கொள்ளக் கூடாது என திட்டமிட்ட வழிப்பறி கொள்ளையர்கள், நண்பரின் செல்போன் எண்ணுக்கு பணத்தை அனுப்பி விட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், தரமணியை சேர்ந்த பாலமுருகன், விக்கி சந்தோஷ்குமார், பிரகாஷ் என 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார், அவர்களிடம் இருந்து ராஜாவின் கைக்கடிகாரம் மற்றும் ஆயிரம் ரூபாய் பணத்தையும் மீட்டனர்.
வழிப்பறி கொள்ளையர்கள் பணப் பரிவர்த்தனை செயலி மூலம் பணம் பறிப்பது இதுவே முதன்முறை எனக்கூறும் போலீசார், கூகுள் பே போன்ற பண பரிவர்த்தனை செயலிகளை பயன்படுத்துபவர்கள் கவனமாக செயல்பட அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், பணத்தை இழந்தவர்கள் உடனடியாக சைபர் பிரிவு போலீசில் புகாரளித்தால், பணப் பரிவர்த்தனையை தடுக்க வாய்ப்பு உள்ளது என்றும் போலீசார் கூறியுள்ளனர்.

மற்ற செய்திகள்
