‘நாளை முதல்’... ‘சென்னை புறநகர் ரயில்களில்'... ‘குறிப்பிட்ட நேரங்களில் மட்டும்’... ‘இவங்களும் பயணிக்கலாம்’... ‘தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு’...!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் இயக்கப்பட்டு வரும் அத்தியாவசிய பணியாளர்களுக்கான சிறப்பு புறநகர் மின்சார ரயில்களில் வரும் 23-ம் தேதி முதல் அலுவலக நேரம் தவிர மற்ற நேரங்களில் பெண்கள் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு வழக்கமான மின்சார ரயில்கள் இயக்கப்படவில்லை. இருப்பினும் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட உடன், ரயில்வே ஊழியர்கள், வங்கிகள், காப்பீடு, பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், அத்தியாவசிய பணிக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் பயணம் செய்ய வசதியாக செங்கல்பட்டு, அரக்கோணம், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் இருந்து சென்னை கடற்கரை, சென்ட்ரலுக்கு தினமும் மின்சார சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
சிறப்பு ரயில்களில் பயணம் செய்ய சம்பந்தப்பட்ட அலுவலகம் அல்லது நிறுவனத்தின் அங்கீகார கடிதம் மற்றும் அலுவலக அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும் என்று இருந்தது. இதற்காக மொத்தம் 244 மின்சார சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் அத்தியாவசிய இல்லாத பெண்கள் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், இந்த சிறப்பு ரயில்களில் வரும் 23-ம் தேதி முதல் அத்தியாவசிய பணிகள் பட்டியலின்கீழ் வராத பெண் பயணிகளை சாதாரண நேரங்களில் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரையிலும் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நாள்முழுவதும் பயணிக்க ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
அதன்படி அதிகாலை முதல் காலை 7 மணி வரை, காலை 10 முதல் மாலை 4.30 மணி வரை அனுமதி அளிக்கப்படுகிறது. மாலை 7.30 மணி முதல் இரவு வரையிலும் பெண்கள் பயணிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.
மற்ற நேரங்களில் பயணிக்க அனுமதி இல்லை. இந்த குறிப்பிட்டுள்ள நேரங்களில் மட்டும் மாதாந்திர பயணச்சீட்டு அல்லது சாதாரண பயணச்சீட்டு மூலம் பெண் பயணிகள் சிறப்பு ரயிலில் பயணிக்கலாம். மேலும் கூட்ட நெரிசலை தவிர்த்து, மக்கள் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து பயணம் செய்ய வேண்டுமென தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.