செங்கல்பட்டு என்கவுண்டர்.. இரட்டைக் கொலைக்கு ‘ஸ்கெட்ச்’ போட்டுக்கொடுத்த பெண்.. வெளியான பரபரப்பு தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்செங்கல்பட்டில் இரண்டு ரவுடிகளை போலீசார் என்கவுண்டர் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு கே.கே தெரு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் என்கிற அப்பு (வயது 30). இவர் சில தினங்களுக்கு முன்பு செங்கல்பட்டு டவுன் போலீஸ் நிலையம் எதிரே உள்ள டீக்கடைக்கு டீ குடிக்க வந்துள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட கும்பல், திடீரென நாட்டு கார்த்திக் மீது நாட்டு வெடிகுண்டை வீசியுள்ளது. இதில் நிலைகுலைந்த கார்த்திக்கை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த கார்த்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனை அடுத்து செங்கல்பட்டு மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்த மகேஷ் (வயது 22) என்பவரது வீட்டுக்கு இந்த மர்ம கும்பல் சென்றுள்ளது. இவரது வீடு செங்கல்பட்டு டவுன் போலீஸ் நிலையத்தில் இருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. அப்போது மகேஷ் தனது வீட்டில் டிவி பார்த்துக் கொண்டு இருந்துள்ளார். திடீரென உள்ளே நுழைந்த மர்ம கும்பல், குடும்பத்தினரின் முன்பே மகேஷை அரிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்து உள்ளது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அடுத்தடுத்து இரண்டு கொலைகள் நடந்த சம்பவம் செங்கல்பட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்த சூழ்நிலையில் வெடிகுண்டு வீசி இரட்டை கொலை செய்த வழக்கில் மாதவன் மற்றும் ஜெசிகா என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை சம்பவத்துக்கு ஜெசிகாதான் ஸ்கெட்ச் போட்டு கொடுத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து அவர்கள் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் செங்கல்பட்டு சுங்கச்சாவடிக்கு அருகே உள்ள பாலத்தின் கீழ் பதுங்கியிருந்த தினேஷ் மற்றும் மொய்தீனை போலீசார் கைது செய்ய சென்றனர்.
அப்போது அரிவாளால் வெட்டியும், நாட்டு வெடிகுண்டை வீசியும் போலீசாரை தாக்கியுள்ளனர். இதில் இரண்டு போலீசார் காயமடைந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கியால் சுட்டத்தில் தினேஷ் மற்றும் மொய்தீன் உயிரிழந்துவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தெரிவித்த ஐஜி சந்தோஷ்குமார், செங்கப்பட்டு காவல் நிலையம் அருகே கடந்த வியாழக்கிழமை இரவு அப்புக் கார்த்திக் மற்றும் மகேஷ் ஆகிய இருவர் அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்டனர். இதில் தொடர்புடைய குற்றவாளிகளில் தினேஷ், மொய்தீன் ஆகியோரை செங்கப்பட்டு எஸ்.பி அரவிந்தன் தலைமையிலான போலீசார் பிடிக்க சென்றனர்.
அப்போது போலீசாரை நோக்கி நாட்டு வெடிகுண்டுகளை வீசியதாலும், காவலர்களை அரிவாளால் வெட்டியதாலும், வேறு வழி இல்லாமல் தங்களை தற்காத்துக் கொள்ள போலீசார் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் தினேஷ், மொய்தீன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர்’ என ஐஜி சந்தோஷ்குமார் தெரிவித்துள்ளார். இதனிடையே என்கவுண்டர் செய்யப்பட்ட 2 ரவுடிகளின் உடல்கள் வைக்கப்பட்டுள்ள செங்கபட்டு அரசு மருத்துவமனையில் வருவாய் கோட்டாட்சியர் சாஜிதா பர்வீன் ஆய்வு மேற்கொண்டார்.

மற்ற செய்திகள்
