காணாமல் போன சிலை.. அதிர்ச்சியில் அன்னபூரணி??.. நாளுக்கு நாள் பல்டி அடிக்கும் விவகாரம்
முகப்பு > செய்திகள் > தமிழகம்செங்கல்பட்டு : இணையத்தில் வைரலான அன்னபூரணி, தனது கணவருக்காக வைத்திருந்த சிலை ஒன்று தற்போது காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த இரண்டு மூன்று நாட்களாக, இணையம் முழுவதையும், அன்னபூரணி அம்மா, ஆதிபராசக்தி அம்மா என பெண்மணி ஒருவரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தான் அதிகம் ஆக்கிரமித்திருந்தது.
செங்கல்பட்டு அருகேயுள்ள மண்டபம் ஒன்றில், சில தினங்களுக்கு முன்பு, அன்னபூரணி அரசு என்ற பெண்மணி, இருக்கை ஒன்றில் அமர்ந்திருக்கிறார். அப்போது, அவரைச் சூழ்ந்திருக்கும் நபர்கள், அவரிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டும், கால்களில் விழுந்து வணங்கிக் கொண்டும் செல்கின்றனர்.
யார் இந்த அன்னபூரணி?
கழுத்தில் மாலை அணிந்து இருக்கும் அன்னபூரணி, பக்தர்களுக்கு தனது ஆசீர்வாதத்தையும் வழங்குகிறார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலானது. உடனடியாக, அவர் யார் என்பது பற்றிய தேடலில், நெட்டிசன்கள் இறங்கியுள்ளனர். சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில், வேறொருவரின் கணவருடன் தனிக் குடித்தனம் நடத்தி வந்தது தொடர்பாக கலந்து கொண்டார்.
நிகழ்ச்சிக்கு தடை
இதனிடையே, கடந்த காலம் மற்றும் நிகழ்காலம் என இரண்டில் அன்னபூரணி எப்படி இருந்தார் என்பது பற்றியான வீடியோக்களை ஒப்பிட்டும், நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இதனிடையே, வரும் ஜனவரி மாதம் 1 ஆம் தேதியன்று, அன்னபூரணி அரசு அம்மாவின் நிகழ்ச்சி ஒன்று, செங்கல்பட்டிலுள்ள மண்டபம் ஒன்றில் நடைபெற இருப்பதாக போஸ்டர்கள் வெளியாகியிருந்தது.
இயற்கையின் நியதி
இந்நிலையில், அனுமதி இல்லாமல் இந்த நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டதாக, போலீசார் இதற்கு தடை விதித்துள்ளனர். மேலும், சம்மந்தப்பட்ட மண்டபத்திற்கும் போலீசார் எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல், அன்னபூரணியை போலீசார் தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து, 'Behindwoods' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அன்னபூரணி, 'என்னைப் பற்றி யாருக்கும் எதுவும் தெரியவில்லை. உண்மை தெரியாமல் வதந்தி கிளப்புகிறார்கள். நானும், அரசும் ஒன்றிணைவது இயற்கையின் நியதி.
நிறைய வதந்திகள்
இயற்கை ஒளி என்னும் ஆன்மீக பயணத்தில் நாங்கள் இணைந்து ஈடுபட்டோம். அவரது பணி முடிவடைந்து விட்டது. இப்பொது அவருடைய சக்தியும் சேர்ந்து என்னிடத்தில் உள்ளது. நான் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் பெயரில் என்னைப் பற்றி நிறைய வதந்திகள் வருகிறது. என்னைப் பற்றி யாருக்கும் சரிவர தெரியவில்லை' என குறிப்பிட்டிருந்தார்.
காணாமல் போன சிலை
இந்த வீடியோவும், நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வந்தது. இந்நிலையில், மதுராந்தகம் அடுத்த தாதங்குப்பம் என்னும் பகுதியில் சாமியாராக வலம் வரும் அன்னபூரணி அரசு, தனது கணவர் அரசுக்காக சிலை ஒன்றை அமைத்து, அதற்கு தினந்தோறும் பூஜையும் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, அந்த சிலை திடீரென காணாமல் போனதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று சிலையை எடுத்துச் சென்று விட்டதாகவும், இதுகுறித்த புகாரின் பெயரில் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.