"காட்டுமிராண்டித்தனமான செயல்!".. எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்து களங்கப்படுத்திய "சமூக விரோதிகள்" - முதல்வர் பழனிசாமி கடும் கண்டனம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு புதுச்சேரியில் மர்மநபர்கள் காவித்துண்டு அணிவித்த செயல் வேதனையும் வருத்தமும் தருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி வில்லியனூரில் எம்.ஜி.ஆர். சிலைக்கு அடையாளம் தெரியாத நபர்கள், காவித் துண்டு அணிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து வந்த புதுச்சேரி எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், வையாபுரி, மணிகண்டன் ஆகியோர், இச்சம்பவத்தை கண்டித்து சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
அங்கு வந்த வில்லியனூர் போலீசார், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். திராவிட கொள்கையில் தீவிரமாக வாழ்ந்து மறைந்த எம்.ஜி.ஆரின் சிலைக்கு காவித் துண்டு அணிவிப்பது கண்டிக்கத்தக்கது என அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் தெரிவித்திருந்தார்.
மேலும், அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வமும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக புதுச்சேரி சட்டப்பேரவையில் உரையாற்ற வர இருந்த கிரண் பேடியின் வழியை மறித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். போலீசாரின் பேச்சுவார்த்தையை அடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்த நிலையில், தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், "எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மர்ம நபர்கள் காவித்துண்டு அணிவித்து, களங்கப்படுத்திய கொடுஞ்செயல் அண்டை மாநிலமான புதுச்சேரியில் நிகழ்ந்திருப்பது மிகுந்த மன வேதனையையும், வருத்தத்தையும் தருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், "இந்த காட்டுமிராண்டித்தனம் கடுமையாக கண்டிக்கத்தக்கது. சமீபகாலத்தில் இதுபோன்ற, சமூகத்திற்கு தொண்டாற்றிய தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்துவது, களங்கப்படுத்துவது போன்ற இழிசெயல்கள் மிகுந்த வருத்தத்தை தருகிறது. உயரிய கொள்கை என்பது நமது லட்சியங்களை பிறர் ஏற்க பாடுபடுவது மட்டுமல்ல, மாற்று கருத்துக்களையும், குறிப்பாக மக்களின் நம்பிக்கைகளையும் மதிப்பதும் ஆகும்.
கருத்து சுதந்திரமென்ற பெயரில் தரமற்ற விமர்சனங்களால் பிறர் மனங்களை காயப்படுத்துவது, மனித நாகரீகத்திற்கு மாறான செயலாகும். மொழியால், இனத்தால், மதத்தால், சாதியால் வேறுபட்டு இருந்தாலும், இந்தியர் என்கிற ஒற்றைச் சொல்லில் பெருமிதம் கொண்டெழுகிற நமது ஒருமைப்பாட்டுக்கும், ஒற்றுமைக்கும் குந்தகம் விளைவிக்கவும், அதன்மூலம் ஓட்டு அரசியல் பிழைப்பிற்கும் சிலர் திட்டமிடுவதை ஒரு போதும் தமிழினம் ஏற்காது.
ஆன்மீக செம்மல் அரவிந்தரும், உணர்ச்சிக் கவிஞர் பாவேந்தரும் உதித்த புதுச்சேரி மண்ணில், புரட்சித் தலைவரின் திருவுருவச் சிலைக்கு அவமரியாதையை ஏற்படுத்தியிருக்கும் விஷமிகளை விரைந்து கண்டுபிடித்து, அவர்களை பின்னால் இருந்து இயக்கும் சமூக விரோதிகளையும் இனம் கண்டு, சமூகத்தின் முன்னும், சட்டத்தின் முன்னும் அவர்களை தோலுரித்து காட்டிட, கடுமையான விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெண்மணி ஒருவர் தாம் தான் எம்.ஜி.ஆர் சிலை மீது காவி துண்டு அணிவித்ததாக தெரிவித்துள்ளார். ஏன் எதற்கு என்று கேட்டபோது தனது கணவர் ஞாபகமாக, எனது கணவர் எம்ஜிஆர் கட்சியை சேர்ந்தவர் என்பதற்காக, நான் எம்ஜிஆர் கட்சி சார்ந்தவள் என்பதற்காகவும், தலைவர் எம்ஜிஆர் சிலைக்கு நான் தான் காவி துண்டை அணிவித்தேன் என்று கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
