சிபிஐ கட்டுப்பாட்டில் இருந்த... 103 கிலோ தங்கம் மாயமானது எப்படி?.. சிபிசிஐடி விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்103 கிலோ தங்கம் மாயமான விவகாரத்தில் சி.பி.ஐ. கட்டுப்பாட்டில் இருந்த பெட்டகத்தை கள்ள சாவி போட்டு எடுத்தது, சி.பி.சி.ஐ.டி விசாரணையில் அம்பலமானது.

சென்னையில் சி.பி.ஐ. போலீசார் பறிமுதல் செய்த 103 கிலோ தங்கம் மாயமான வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வீடியோ ஆதாரங்களை கைப்பற்றினார்கள்.
சென்னை பாரிமுனையில் செயல்படும் தனியார் தங்க ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தில் கடந்த 2012-ம் ஆண்டு சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின்போது, குறிப்பிட்ட தனியார் நிறுவனத்தில் 400.47 கிலோ தங்கத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட அந்த தங்கம், அதே நிறுவனத்தில் உள்ள பாதுகாப்பு லாக்கரில் பத்திரமாக வைக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டது. அந்த லாக்கரின் சாவிகள் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டன. கடந்த பிப்ரவரி மாதம் குறிப்பிட்ட லாக்கரை திறந்து பார்த்தபோது, அதில், 103.864 கிலோ தங்கம் மாயமாகிவிட்டது.
இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், இதுபற்றி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதன் பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சரவணன், சத்தியசீலன் மற்றும் 2 இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய தனிப்படை இதற்காக அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் திருட்டு வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
இந்நிலையில், 103 கிலோ தங்கம் மாயமான விவகாரத்தில் சுரானா அலுவலகத்தில் இன்று சுமார் 2 மணி நேரம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் தங்கம் வைக்கப்பட்டிருந்த பெட்டகம், அலுவலகம், அறைகள் மற்றும் சி.சி.டி.வி உள்ளிட்டவற்றை சி.பி.சி.ஐ.டி ஆய்வு செய்தது.
விசாரணை நிறைவில் 103 கிலோ தங்கம் மாயமான விவகாரத்தில் சி.பி.ஐ. கட்டுப்பாட்டில் இருந்த பெட்டகத்தை கள்ள சாவி போட்டு எடுத்தது அம்பலமானது. மேலும், சீலை உடைத்து கள்ளச்சாவி போட்டு திருடியது யார் என விரைவில் விசாரணையில் தெரியவரும் என சி.பி.சி.ஐ.டி தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்
