அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது.. திமுக நிர்வாகி தாக்கப்பட்ட வழக்கில் போலீசார் நடவடிக்கை..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் வாக்குப்பதிவின் போது ஒருவரை தாக்கிய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது ராயபுரம் தொகுதியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக ஒருவரை அதிமுகவினர் பிடித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் தாக்கத் தொடங்கினர். அப்போது, பிடிபட்ட நபரை அடிக்க வேண்டாம் என்றும், அவரது கையை கட்டும்படியும் ஜெயக்குமார் கூறினார். இதனை அடுது அந்த நபரை சட்டையின்றி சாலையில் அழைத்து வந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை அடுத்து ஜெயக்குமார் மற்றும் அதிமுக தொண்டர்களால் தாக்குதலுக்கு உள்ளான நபர் திமுக தொண்டர் என்பது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக திமுகவைச் சேர்ந்த நரேஷ் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது தாக்குதல், கலகம் செய்ய தூண்டுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதேபோல், ஜெயக்குமாரின் கார் ஓட்டுநர் ஜெகன்நாதன் அளித்த புகாரின்பேரில் திமுக தரப்பைச் சேர்ந்த 10 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் தற்போது அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பட்டினப்பாக்கம் வீட்டிலிருந்த ஜெயக்குமாரை போலீசார் கைது செய்துள்ளதாகவும், அவரை சென்னை எழும்பூர் நீதிபதி முன் ஆஜர்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
