பரோட்டா சாப்டா பரிசு, மெடல், கோப்பை... ‘வெண்ணிலா கபடி குழு’ சூரிக்கே டஃப் கொடுப்பாங்க போலயே..
முகப்பு > செய்திகள் > தமிழகம்30 பரோட்டா சாப்பிட்டால் பணம், கோப்பை, மெடல் அளிப்பதாக வெளிவந்த விளம்பரம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவிவருகிறது.

திருச்சி மாவட்டம், துவங்குறிச்சியில் வரும் ஞாயிற்றுக் கிழமை துவங்கப்பட இருக்கிறது ஸ்ரீ கணபதி ஹோட்டல். இதனை முன்னிட்டு துவக்க விழா ஆஃபராக பரோட்டா சாப்பிடும் போட்டி ஒன்றினை நடத்த இருப்பதாக ஹோட்டல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பரோட்டா போட்டி
ஹோட்டல் திறக்கப்படும் ஞாயிற்றுக்கிழமை அன்று துவங்கி 3 நாட்கள் இந்தப் போட்டி நடைபெற இருக்கிறது. இதில் இரு வகையான போட்டிகள் உள்ளன. முதலாவது 25 பரோட்டா சாப்பிடுபவர்களுக்கான போட்டி. இரண்டாவது 30 பரோட்டா சாப்பிடுபவர்களுக்கான போட்டி ஆகும்.
போட்டியில் கலந்துகொள்ளும் நபருக்கு 30 நிமிடம் எக்ஸ்டரா 5 நிமிடமும் வழங்கப்படும். அதற்குள் 25 அல்லது 30 பரோட்டாக்களை சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிடுபவர்களுக்கு அதிரடி பரிசுகளையும் அளிக்க இருப்பதாக அந்த ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை துவங்கி செவ்வாய் வரை நடைபெறும் இந்த போட்டி தினந்தோறும் மாலை 3 மணிமுதல் இரவு 10 மணிவரையில் நடக்க இருக்கிறது.
பரிசு
30 பரோட்டா பிரிவில் வெற்றி பெறுபவர்களுக்கு 5300 ரூபாய் பணம், கோப்பை மற்றும் மெடல் அளிக்கப்படும் என ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்து இருக்கிறது. அதேபோல, 25 பரோட்டா பிரிவில் வெற்றி பெறுபவர்களுக்கு 2250 ரூபாய் பணம், கோப்பை மற்றும் மெடல் உண்டு.
ஒருவேளை போட்டியில் கலந்துகொண்டு நிர்ணயிக்கப்பட்ட பரோட்டாக்களை சாப்பிட முடியவில்லை என்றால் அதற்கான பணத்தை செலுத்த வேண்டும் என ஹோட்டல் நிர்வாகம் விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ளது.
இதுபற்றி இந்த ஹோட்டல் உரிமையாளர் ஆண்டிச் சாமி பேசியபோது," எதையும் வித்தியாசமாக செய்ய வேண்டும் என நான் விரும்புவேன். அதனாலேயே இப்படி ஒரு போட்டியை நடத்த திட்டமிட்டேன்" என்றார்.
பரோட்டா பிரியர்களை கவர்ந்து இழுத்திருக்கும் இந்த போஸ்டர் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மற்ற செய்திகள்
