'பதுக்கி வச்சு அங்கெல்லாம் சேல் பண்றங்க...' '144 தடை உத்தரவையும் மீறி மது விற்பனை...' போலீசார் விரைந்து நடவடிக்கை...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Mar 26, 2020 12:42 PM

கொரோனா தீவிரமாக பரவி வரும் சூழலிலும் மது பாட்டில்களைப் பதுக்கி வைத்து அவற்றைக் திருட்டுத்தனமாக விற்பனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

4000 bottles confiscated liquor dealers in violation of curfew

கொரானோ வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில்  ராமநாதபுரம் மாவட்டத்தில் திருட்டுத் தனமாக விற்க முயன்ற நான்காயிரம் மதுபாட்டில்களை போலீஸார் கைப்பற்றினர். இதில் கமுதியைச் சேர்ந்த ஒரே நபரிடமிருந்து 600-க்கும் அதிமான மதுபாட்டில்கள் சிக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்று பரவலைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 21 நாள் ஊரடங்கு அறிவிப்புக்கு முன்னரே தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இயங்கி வந்த டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டது. இதனால் மதுபானப் பிரியர்கள் மது அருந்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட சிலர் மது பாட்டில்களைப் பதுக்கி வைத்து அவற்றை கள்ளத்தனமாக விற்பனை செய்வதில் ஈடுபட்டு வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், ராமநாதபுரம், கீழக்கரை, கடலாடி, சாயல்குடி, முதுகுளத்தூர், கமுதி, பரமக்குடி, ஆர்.எஸ். மங்களம், திருவாடானை என அனைத்துப் பகுதிகளிலும் கள்ள மது விற்பனை தடையின்றி நடந்து வருகிறது.

இது குறித்த புகார்கள் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்குச் சென்ற நிலையில் தனிப்பிரிவு மற்றும் உள்ளூர் போலீஸார் தீவிர நடவடிக்கைகளில் இறங்கினர். இதன் காரணமாக கடந்த 3 நாள்களில் மட்டும் கள்ளத்தனமாக மது விற்றவர்கள் மீது 80 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன் அவர்களிடமிருந்து 3,954 மது பாட்டில்கள் இதுவரை கைப்பற்றப் பட்டுள்ளது. இதில் கமுதியில் கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்ட ஒரே நபரிடம் இருந்து 647 மது பாட்டில்கள் கைபற்றப்பட்ட நிலையில் அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Tags : #LIQUOR