முதல்ல டிஸ்டன்ஸ், அப்புறம் தான் சரக்கு... ஒரு மீட்டர் இடைவெளியில் நீண்ட வரிசையில் நின்று... சுகாதாரத் துறையின் அறிவுரைப்படி நடக்கும் பொறுப்பான 'குடி'மகன்கள்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவிவரும் சூழலில் அதற்குண்டான கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும் கேரள குடிமகன்களின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.
தென் இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவி வரும் மாநிலமாக கேரளா திகழ்கிறது. கேரளாவில் இதுவரை 24 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மருத்துவமனை மற்றும் வீடுகளில் கண்காணிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 4,180 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில், 270 பேர் மருத்துவமனைகளிலும், 3,910 வீடுகளிலும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
கேரள அரசாங்கம் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பலமுறைகளில் முயற்சி செய்து வருகிறது. கொரோனா வைரஸ் விழிப்புணர்வுக்காக கேரள போலீசார் நேற்று வெளியிட்ட வீடியோ அனைவராலும் பாராட்டப்படும், சமூக வலைத்தளங்களில் அனைவராலும் பகிரப்பட்டு வந்தது. மேலும் தன்னார்வலர்கள் சிலர் கேரளாவின் பேருந்து நிலையங்களிலும், பொது மக்கள் கூடும் இடங்களிலும் சோப்பு, கிருமி நாசினி வைத்து மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.
கேரள அரசாங்கம் கோவிட் 19 தாக்கிய மக்களிடம் விசாரணை நடத்திய போது, ஒரு சில கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் தனக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரியாமல் 'சேர் ஆட்டோ, பஸ், ரயில்' உள்ளிட்டவற்றில் பல்வேறு இடங்களுக்கும் சென்றுள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. பலரும் வீடுகளில் முடங்கியுள்ளனர். வெளியில் சென்றால், முகக் கவசம் அணிந்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, மக்கள் அதிகமாகக் கூடும், ஷாப்பிங் மால், திரையரங்குகள், பள்ளி, கல்லூரிகளுக்குக் கேரள அரசு விடுமுறை அறிவித்துள்ளது. ஆனால், கேரள மதுபான விற்பனைக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கவில்லை.
கொரோனா வைரசுக்கு பயந்து ஒரு சில குடிமகன்கள் வீட்டிலே தனிமையில் இருப்பதால் அனைத்து இடங்களும் வெறிச்சோடியுள்ளன. ஆனால், மதுபானக் கடைகள் மட்டும் எப்போதும் இயங்குகின்றன. ஆனால், குடிமகன்கள் அனைவரும், ஒரு மீட்டர் இடைவெளி விட்டு, நீண்ட வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கிச் செல்கின்றனர்.
என்ன தான் வீட்டை விட்டு வெளியே வந்தாலும் கேரள அரசு வெளியிட்ட மற்றும் உலகச் சுகாதார அமைப்பின் வெளியிட்ட 'கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, அனைவரும் ஒரு மீட்டர் இடைவெளியில் நிற்க வேண்டும்' என்ற அறிவுரைப்படி, மதுப்பிரியர்கள் இடைவெளி விட்டு நிற்கும் படங்கள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அதற்கு பலரும், 'கேரள மக்களின் பொறுப்பான குடிப்பழக்கம் ஒரு புதிய அர்த்தத்தைக் கொண்டுள்ளது' என, கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பொது மக்களில் சிலரும், மதுக்கடைப் பணியாளர்களும் மது பிரியர்களால் தங்களுக்கு கொரோனா பரவும் என நினைத்து மதுக்கடைகளை அடைக்கக் கோரி, சில நாட்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.