'நண்பர்களுக்குள் இருந்த வித்தியாசமான பழக்கம்'... 'யாருமே யோசிக்காத வகையில் உடலை மறைக்க யூஸ் பண்ண டெக்நிக்'... பரபரப்பை கிளப்பிய வாக்குமூலம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பகைவனின் பகையை விட நண்பனின் பகையே ஆபத்தானது, என்ற கூற்றுக்கு இணங்க இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் ஜேம்ஸ் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். செங்கல்சூளையில் வேலைபார்த்து வந்துள்ளார். திருமணம் ஆகாத நிலையில் தனியாக ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 1-ந் தேதியில் இருந்து அவரை காணவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் பயந்து போன அவரது சகோதரி முத்து லட்சுமி, மணிகண்டனை பல இடங்களில் தேடி பார்த்துள்ளார். ஆனால் அவர் குறித்து எந்த தகவலும் இல்லாத நிலையில், முத்து லட்சுமி அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார் விசாரணையைத் தொடங்கிய நிலையில், அஞ்சுகிராமம் போலீஸ் நிலைய தொலைப்பேசிக்குத் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் காணாமல் போன மணிகண்டன் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற திடுக்கிடும் தகவலைத் தெரிவித்துள்ளார்கள். இதையடுத்து விசாரணையைத் துரிதப்படுத்திய போலீசார், மணிகண்டனுடன் சுற்றி திரிந்த ஜேம்ஸ் டவுன் லட்சுமிபுரத்தை சேர்ந்த நிஷாந்த் இறச்சகுளம் பகுதியைச் சேர்ந்த கணேஷ் மற்றும் 18 வயது சிறுவன் ஆகிய 3 பேரைச் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது காணாமல் போன மணிகண்டனைக் கொன்றது அவர்கள் தான் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.
இதையடுத்து விசாரணையில் வெளியான பரபரப்பு தகவல்கள் வருமாறு, ''கொலை செய்யப்பட்ட மணிகண்டனும், 3 பேரும் நண்பர்கள். இவர்கள் 4 பேருக்கும் ஒரு வித்தியாசமான பழக்கம் இருந்துள்ளது. மதுப் பழக்கத்திற்கு அடிமையான இவர்கள் மது போதையில் உச்சத்தில் இருக்கும் போது, கஞ்சாவைப் புகைத்து அதன் உச்சக்கட்ட போதைக்குச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்கள். அவ்வாறு இரவில் ஒன்றாக அமர்ந்து போதையில் இருப்பது இவர்களின் வழக்கமாக இருந்துள்ளது. அந்த வகையில் உச்சக்கட்ட போதையிலிருந்த ஒரு நாள் மணிகண்டன் நண்பர்களின் செல்போனை திருடி விட்டதாகவும், மேலும் கஞ்சாவை அவர்களுக்கே தெரியாமல் மறைத்து வைத்ததாகவும் தெரிகிறது.
இதை அறிந்த மற்ற 3 நண்பர்களுக்கும் கடும் ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. இதனால் மணிகண்டனைப் பழிவாங்க மற்ற 3 பேரும் திட்டமிட்டுள்ளார்கள். அதன்படி சம்பவத்தன்று இரவு 4 பேரும் சேர்ந்து மணிகண்டனின் வீடு அருகே மது அருந்தி உள்ளனர். அந்த நேரம் பார்த்து மீண்டும் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே மணிகண்டன் மீது கடும் ஆத்திரத்திலிருந்த 3 பேரும், மணிகண்டனைக் கடுமையாகத் தாக்கியதோடு திடீரென கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளார்கள். இதில் படுகாயமடைந்த அவர் அதே இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் அந்த கொலை பற்றி வெளியே தெரியாமல் இருக்க உடலை மறைக்க முடிவு செய்தனர்.
அந்த வகையில் குளத்தில் உள்ள ஒரு மரத்தின் அடியில் உடலைக் கட்டி வைத்து தண்ணீருக்குள் மூழ்கிய நிலையில் இருக்கும்படி செய்து விட்டனர். இதனால் காணாமல் போன மணிகண்டனை அனைவரும் தேடிக் கொண்டு தான் இருப்பார்கள். யாருக்கும் இதனால் சந்தேகம் வராது என முடிவு செய்து கொண்டார்கள். அவர்கள் நினைத்தவாறே யாருக்கும் சந்தேகம் வரவில்லை. ஆனால் மணிகண்டனின் நண்பர்கள் என்ற அடிப்படையில் சந்தேகப்பட்டு போலீசார் 3 பேரையும் விசாரித்ததில், 3 பேரும் எதையோ மறைக்கிறார்கள் என்பதை உணர்ந்த போலீசார், தங்களின் பாணியில் விசாரித்ததில் தற்போது உண்மை அனைத்தும் வெளிவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து மணிகண்டன் உடல் மறைத்து வைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டுவதற்காக 3 பேரையும் போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு உடல் கட்டி வைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டினர். மேலும் உடலை மீட்பதற்காகக் கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். குளத்திலிருந்த மரத்தின் அடியில் உடல் கட்டி வைக்கப்பட்டிருந்தது. அதே சமயத்தில், தண்ணீருக்குள் உடல் மூழ்கடிக்கப்பட்டு வெளியே தெரியாதபடி இருந்தது. இந்த உடலைத் தீயணைப்பு வீரர்கள் கடும் சிரமத்துடன் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
உடன் பழகிய நண்பனைக் கொடூரமாகக் கொலை செய்ததோடு, அதை மறைக்க நண்பர்கள் பயன்படுத்திய டெக் நிக் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.