'அந்த பொண்ணும் மனுஷி தான்'... 'நீ பண்ற வேலைக்கு பெத்தவங்க நாங்க சப்போர்ட் வேற பண்ணனுமா'... இளம் என்ஜினீயர் செஞ்ச கோரம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இரு மனம் இணைந்தால் மட்டுமே வாழ்க்கை என்பது இனிதான ஒன்றாக இருக்கும். ஆனால் யாரையும் வற்புறுத்தி அவர்களது அன்பைப் பெற முடியாது. அப்படி முயன்றதால் நடந்த துயரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்திக் குறிப்பு.

தேனி மாவட்டம் கம்பம் சின்னவாய்க்கால் தெருவில் வசித்து வருபவர் முருகேசன். காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். அவருடைய மனைவி இந்திராதேவி. இவர்களுக்கு மனோஜ் என்ற மகன் இருந்தார். என்ஜினீயரான அவர், அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரைத் தீவிரமாகக் காதலித்து வந்துள்ளார். மனோஜ் ஒரு தலையாகக் காதலித்து வந்த நிலையில், அந்த பெண்ணுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இதை அறிந்த மனோஜ் மனம் உடைந்து காணப்பட்டார்.
தனது பெற்றோரிடம் அந்த பெண்ணை தனக்குத் திருமணம் செய்து வைக்குமாறு மனோஜ் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள், அந்த பெண் உன்னைக் காதலித்தால் தாராளமாக அவர்களிடம் சென்று பெண் கேட்கலாம். நீ ஒரு தலையாகக் காதலித்ததற்கு எல்லாம் அந்த பெண்ணை திருமணம் செய்து வைக்க முடியாது எனக் கூறியுள்ளார்கள். இதனால் மீண்டும் மனமுடைந்த மனோஜ் வீட்டிலிருந்துள்ளார். இந்த சூழ்நிலையில் வழக்கத்திற்கு மாறாக நேற்று அதிகாலையிலேயே எழுந்த அவர், வீட்டில் இருந்து வெளியே செல்ல முயன்றுள்ளார்.
இதைக் கவனித்த தந்தை முருகேசன், அதிகாலையில் எங்கே செல்கிறாய் என கேட்டுள்ளார். ஆனால் அவர் பதில் சொல்லாமல் வெளியே செல்ல முயற்சித்துள்ளார். இதை முருகேசன் தடுத்த நிலையில், ஆத்திரமடைந்த மனோஜ், வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து தந்தை என்றும் பாராமல் முருகேசனை வெட்டியுள்ளார். கணவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த மனோஜின் தாய் இந்திராதேவி, மகனைத் தடுக்க முயன்றார். அப்போது அவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. பின்னர் வீட்டில் உள்ள அறைக்குச் சென்ற மனோஜ் உள்பக்கமாகப் பூட்டிக் கொண்டார்.
இதையடுத்து படுகாயமடைந்த முருகேசன், தனது மனைவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். பின்பு காவல்துறைக்கு நடந்த சம்பவம் குறித்து தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் முருகேசன் வீட்டிற்குச் சென்ற போலீசார், மனோஜ் இருந்த அறையைத் திறக்க முயன்றனர். ஆனால் கதவு உட்புறமாகப் பூட்டப்பட்டிருந்ததால் திறக்கமுடியவில்லை. இதையடுத்து அறையின் கதவை உடைத்து போலீசார் உள்ளே நுழைந்தனர். அங்கு மனோஜ் இடுப்பில் அணியும் ‘பெல்டால்’ கழுத்தை இறுக்கி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து மனோஜின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகக் கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு தலை காதலுக்காக ஒரு நிமிட ஆத்திரத்தில் பெற்றோரை அரிவாளால் வெட்டியதுடன், தனது வாழ்க்கையை அவசரப்பட்டு இளம் என்ஜினீயர் முடித்துக் கொண்ட சம்பவம் அந்த பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
